பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தக்லைப். 1987ம் ஆண்டில் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் இணைந்திருந்தனர். இதில் சிம்புவும் முதன்முறையாக கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டிலேயே தக்லைப் படப்பிடிப்பு நடந்து முடித்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகளும் வெகுவேகமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே வருகிற ஜூன் 5ம் தேதி தக்லைப் ரிலீஸ் என்ற அறிவிப்பை தக்லைப் டீசர் வெளியிட்டு மணிரத்னம் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டார்.
ஏனெனில் இப்போதெல்லாம் ஒரு படத்தை இயக்கி ரிலீஸ்க்கு தயார் செய்வதை காட்டிலும் ரிலீஸ் தேதியை அறிவிப்பதுதான் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பெரிய நெருக்கடியாக உள்ளது. ஏனெனில் மற்ற படங்கள் போட்டிக்கு வரும்போது தியேட்டர்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை. மேலும் சில படங்கள் ஒரே நாளில் வரும்போது ரசிகர்களும் மற்ற படங்களை பார்க்க ஆர்வம் காட்டாமல் விட்டு விடுகின்றனர்.
அதனால் பல மாதங்களுக்கு முன்பே ஜூன் 5ம் தேதி தக்லைப் ரிலீஸ் என்ற அறிவிப்பை நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் முடிவு செய்து அறிவித்தனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் 4 மாதங்களாக அமெரிக்காவில் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்ற நிலையில் ஜனவரி மாத இறுதியில்தான் சென்னை திரும்பியிருக்கிறார்.
இந்த சூழலில் இப்போது தக்லைப் படத்தை குறிப்பிட்ட ஜூன் 5ம் தேதி வெளியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஜூன் 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். அதனால் கேரளாவில் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. மலையாள நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடத்தப்படுகிறது.
இதனால் வருகிற ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தக்லைப் படத்தை ரிலீஸ் செய்தாலும் முக்கிய அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் தக்லைப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. ஆனால் கேரளாவில் கமலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பும் வணிகரீதியான நல்ல வசூலும் உள்ளது. அதனால் கேரளா மாநிலத்தில் சினிமா தயாரிப்பாளர் ஸ்டிரைக் முடியும் வரை காத்திருக்கும் ஒரு முடிவில் கமல், மணிரத்னம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தக்லைப் படம் ரிலீஸ் தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது.





