தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். இந்த படம்தான் நடிகர்கள் விஷ்ணு விஷாலின் முதல் படம். நடிகர் சூரிக்கும் காமெடியில் அடையாளம் தந்த படமாக இருந்தது. இந்த படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து நான் மகான் அல்ல ஜீவா பாயும்புலி பாண்டியநாடு ஆதலால் காதல் செய்வீர் அழகர்சாமியின் குதிரை போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன்.
அவரது இயக்கத்தில் வெளியான ராஜபாட்டை ஈஸ்வரன் கென்னடி கிளப் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனினும் நல்ல இயக்குனராக ரசிகர்களின் கவனம் பெற்றவர் சுசீந்திரன். சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் 2கே லவ் ஸ்டோரி என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் சசீந்திரன். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து அவர் இயக்கிய சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதிலும் குறிப்பாக சுசீந்திரன் இயக்கத்தில் 2021ம் ஆண்டில் வெளியான நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் மிக மோசமான ஒரு தோல்விப் படமாக இருந்தது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நிலையில், ஈஸ்வரன் படம் குறித்து இயக்குனர் சசீந்திரன் கூறியதாவது, நடிகர் ஜெய்யை வைச்சு படம் பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். அவருக்காக அந்த கதையை எழுதிவிட்டு ஜெய்யுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அது பேமிலி கதை. அதில் ஹீரோவுக்கு வேலையே கிடையாது.
அதே போல் ரொம்ப நாளாக நடிகர் சிம்பு என்னுடன் படம் பண்ணுவது குறித்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 22 நாளில் ஒரு படம் முடித்து விட்டீர்களாமே, எனக்கும் அப்படி ஒரு படம் பண்ணுங்க என்று சிம்பு என்னிடம் சொன்னார். நான் மாநாடு படம் ஷூட்டிங் போகப் போறேன். அதுக்கு முன்னாடி சின்னதா ஒரு படம் பண்ணலாம். 23 நாள் டேட் தர்றேன் சார் என்றார். சரி ஜெய்க்கு பண்ணியிருக்கிறது பேமிலி டிராமா. அந்த கதையை சொல்வோம் என்று சொன்னேன். இதையே பண்ணுவோம் என்று சிம்பு சொல்லி விட்டார்.
சிம்பு எனக்கு 23 நாள் டேட் தருகிறார். அப்போ அந்த கதைதான் பண்ண முடியும். சிம்பு 80 நாள் டேட் கொடுத்திருந்தால் அதற்கு வேறு கதை பண்ணியிருப்போம். சிம்பு எனக்கு வெச்ச செக்கே 23 நாள் என்பதுதான். ஈஸ்வரன் படத்தின் கதை ஜெய்க்காக எழுதப்பட்டது. அந்த கதையை கொஞ்சம் மாற்றி திருத்தம் செய்து சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் உருவானது. ஆனால் அந்த படம் ரசிகர்களிடம் எடுபடவில்லை. படத்தை பார்த்தவர்கள் காறி துப்பி விட்டார்கள் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் சுசீந்திரன் கூறியிருக்கிறார்.





