கடந்தாண்டில் அரண்மனை 4 என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. அதுவரை 4 மாதங்களாக தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப் படங்களே தமிழில் இல்லாத நிலையில் பிரேமலு பிரமயுகம் மஞ்சும்மெல் பாய்ஸ் ஆவேசம் ஆடுஜீவிதம் போன்ற மலையாள படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், அரண்மனை 4 படம் வந்து மலையாள படங்களை விரட்டியடித்தது.
அதன்பிறகு கில்லி ரி ரிலீஸ் ஆகி மேலும் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு வெளியான மகாராஜா ராயன் போன்ற தமிழ் படங்களின் அபார வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மலையாள படங்கள் எதுவுமில்லை. அப்படி ஒரு வெற்றியை முதலில் துவக்கி வைத்தது சுந்தர் சியின் அரண்மனை 4 படம்தான்.
அதே போல் இந்த ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு வெளியான படம் மதகஜ ராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி மணிவண்ணன் மனோபாலா சோனா சூட் சிட்டி பாபு சடகோபன் ரமேஷ் நிதின் சத்யா சுவாமிநாதன் ஆர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்த இந்த படமும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய வெற்றியை பெற்றது.
12 ஆண்டுகளுக்கு முன் 2012ம் ஆண்டில் உருவான இந்த படம் நிதி பிரச்னை காரணமாக வெளிவராத நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாக மாபெரும் வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு விஷால் சுந்தர் சி கூட்டணியில் புதிய படம் உருவாக ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டு விஷால் கேட்ட சம்பளத்தை பார்த்து அந்த படத்தையே சுந்தர் சி நிராகரித்து விட்டார்.
இப்போது வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்காக அவர் ரூ. 20 கோடி சம்பளம் பெறுகிறார். நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி என்ற நிலையில் இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகிறது. வருகிற 5ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு பிறகு சுந்தர் சி நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். சமீபத்தில் சுந்தர் சி கார்த்தி இருவரும் சந்தித்து பேசிய நிலையில், சுந்தர் சி சொன்ன கதை கார்த்திக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சர்தார் 2 கைதி 2 படங்களை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகி உள்ளது.





