தனுஷிற்கு கடைசியாக வந்த திரைப்படங்களில் ராயன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகியவை மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதில் ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன் உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அந்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. இதற்கு மிக மிக முக்கிய காரணம், ஏ ஆர் ரகுமானின் இசை என்றே கூறலாம். அதுவும் உசுரே நீ தான் என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடிக்க பலரும் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து குபேரா என்னும் திரைப்படத்தில் நடித்து உள்ளார் தனுஷ். சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் காரணமாகவே இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜூன் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படி நடிப்பு ஒரு பக்கம் இருக்க இயக்கத்திலும் தனுஷ் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அண்மையில் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்றது. டிராகன் திரைப்படம் அதனுடன் வந்து மிகப்பெரிய ஹிட் அடித்ததால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் அந்த அளவுக்கு பெரியதாக பேசப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது இட்லி கடை என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் அவருடன் நித்யா மேனன் ராஜ்கிரண் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அருண் விஜய் குத்துச்சண்டை வீரராக வருகிறார் அவருக்கு உதவியாளராக தனுஷ் நடிப்பது போல் தெரிகிறது. ஆனால் படத்தில் அருண் விஜய் தான் வில்லன் என்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை முதலில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடுவதாக தான் தனுஷ் இருந்தார். தற்போது அதற்கான தேதி தள்ளிப் போவதாக தெரிகிறது. இந்த நிலையில் சமீபத்தில், கிராமத்து பின்னணி செட்டப்பில் ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார் தனுஷ். எப்படி திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தாய்க்கிழவி பாடல் எடுக்கப்பட்டதோ அதே ஜானரில்தான் இந்த பாடலும் உருவாகி இருப்பதாக கூறுகிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் விரைவில், படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





