தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார். மக்கள் செல்வன் என அவரை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சில ஆண்டுகளாக தோல்வி படங்கள் தந்த அவருக்கு கடந்தாண்டில் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. இது அவரது 50வது படமாகவும் இருந்தது.
மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான டிரெயின் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் டைரக்ட் செய்திருக்கிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கும் திகில் சம்பவங்களை மையப்படுத்திய திரில் கதையாக இது உருவாகி உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் நடிகர் நாசர் வில்லனாக நடிக்கிறார்.
அதே போல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்த படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நித்யாமேனன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 3வது முறையாக விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லியின் சொந்த தயாரிப்பு நிறுவனமாக ஏ பார் ஆப்பிள் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது.
ராஜா ராணி படத்தை தொடர்ந்து தெறி மெர்சல் பிகில் படங்களை இயக்கிய அட்லி, அடுத்து ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இந்தியில் இயக்கினார். அப்போது அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த போது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை அட்லியே தயாரிக்கிறார் என்பது கவனிக்கத்தது. அதே நேரத்தில் தெறி படத்தை ரீமேக் செய்து பேபி ஜான் படத்தை தயாரித்த அட்லிக்கு ரூ. 100 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 3வது முறையாக அவருடன் விஜய் சேதுபதி கைகோர்க்கிறார். அடுத்த மாதம் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதால், அங்கு செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியிடம், இந்த படத்துக்காக நீங்கள் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக வேண்டும் என்று இயக்குனர் கூறிவிட்டார். அதனால் தீவிர உடற்பயிற்சி உணவுக்கட்டுப்பாடு என உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதுவரை உடல் எடை குறைப்பு உணவு கட்டுப்பாடு இல்லாத விஜய் சேதுபதிக்கு இது பெரிய சிரமத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





