நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்தாண்டில் வெளியாகி ரூ. 100 கோடி வசூலை கடந்தது. இது தனுஷ் நடித்த 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் 21ம் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியானது. தனுஷின் சகோதரி மகன் பவிஷ் அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில் இந்த படம் வெளியான அதே நாளில் ரிலீஸான டிராகன் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.
இப்போது நடிகர் தனுஷ் இட்லிக்கடை என்ற படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் 4வது படமாகும். அதே போல் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ளது. இதற்கிடையே இந்தியில் நடிகர் தனுஷ் தேரோ இஷ்க் மெயின் என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். இது தனுஷின் 55வது படமாகும். மதுரையை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் அன்பு செழியனின் மகள் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை கொண்டு உருவானது. அதே போல் இயக்குனர் ராஜ்குமார் இயக்கும் இந்த படமும் பயோபிக் கதைதான் என்ற லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தை போலவே, இந்த படமும் மாபெரும் வெற்றி பெற மீண்டும் அவர் பயோபிக் கதையை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இளையராஜா பயோபிக்கில் நடிக்க நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி என்ற படத்தில் மொழிப்போர் தியாகி இராசேந்திரன் பயோபிக் கதையில் நடித்து வருகிறார். நடிகர் மாதவன் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படமும் பயோபிக் படமாக உருவாகிறது. ஆனால் இது யாருடைய பயோபிக் என்ற தகவல் தெரியவில்லை.





