நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 171வது படமாக கூலி படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
முதன்முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காம்போவில் உருவாகி உள்ள கூலி படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள கூலி படத்தில் சத்யராஜ் ஸ்ருதிஹாசன் நித்யாராம் உபேந்திரா நாகர்ஜூனா அமீர்கான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இந்தி தெலுங்கு மொழி படங்கள் எல்லாம் ரூ. 1000 கோடி வசூலை அனாயசமாக அள்ளி வரும் நிலையில் தமிழ் சினிமாத்துறையில் இதுவரை ரூ. 1000 கோடி வசூலை எந்த படமும் எட்டவில்லை. கடந்தாண்டிலேயே தி கோட் வேட்டையன் இந்தியன் 2 படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படங்கள் ரூ. 500 கோடி வசூலை கூட எட்டாமல் ஏமாற்றம் தந்தது.
இந்த சூழலில் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் ரூ. 1000 கோடி வசூலை அள்ளும் முதல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் குட் பேட் அக்லி ரெட்ரோ தக்லைப் படங்கள் குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. இதில் எந்த படம் அந்த சாதனையை செய்யப் போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படமாக கூலி படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அதே நாளில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த வார் 2 என்ற பான் இந்தியா படமும் ரிலீஸ் என்ற தகவல் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் இப்போதைய லேட்டஸ்ட் தகவலின்படி வார் 2 படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகாது என்று உறுதியாகி விட்டது. சில தினங்களுக்கு முன் வார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் 3 மாதங்களுக்கு அவர் கட்டாய ஓய்வில் இருக்க டாக்டர்கள் கூறிவிட்டனர். அதுவரை படப்பிடிப்பில் அவர் பங்கேற்க முடியாது என்பதால் இந்த படம் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. அதனால் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்பது போல, ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் மட்டுமே ரிலீஸாகிறது.





