காலா படத்தில் ரஜினிக்கு 3 மகன்களில் ஒருவராக மணிகண்டன் நடித்திருந்தார். இதில் சில காட்சிகளில் ரஜினிக்கு எதிராகவும் ரஜினி கேரக்டரையே எதிர்த்து பேசும் அளவுக்கு முக்கியமான காட்சிகளில் மணிகண்டன் நடித்து அசத்தியிருந்தார். பா ரஞ்சித் மணிகண்டனுக்கு காலா படத்தில் அந்த அடையாளத்தை பெற்றுத் தந்தார்.
அதன்பிறகு ஜெய்பீம் படத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக விசாரணைக் கைதியாக லாக்கப்பில் அவரை போலீசார் அடித்து உதைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு படம் பார்த்தவர்களை எல்லாம் பதைபதைக்க வைத்தது.
பிறகு மணிகண்டன் நடித்த குட்நைட் லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்த 3 படங்களுமே மாபெரும் வெற்றிப் படங்களாக அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொண்டு வந்து விட்டது. அதிலும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டனின் நடிப்பு நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.
நடிகர் மணிகண்டன் ஸ்கிரிப்ட் ரைட்டர் மிமிக்ரி கலைஞர் உதவி இயக்குனர் என அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக சினிமாவில் உயரத்துக்கு வந்தவர் என்பதால், தனக்கு சரியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எந்த கேரக்டராக இருந்தாலும் உள்வாங்கி நடிக்கிறார். அதே நேரத்தில் அவருக்கு ஆஸ்கார் அவார்டு வாங்கும் ஆசையும் ஆரம்பத்தில் இருந்தே உள்ளது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்தே தினமும் நான் ஆஸ்கார் ஸ்பீச் ரிகர்சல் பண்ணிட்டு இருக்கேன். சாரி ஐ யாம் நாட் தட் குட் இங்கிலீஷ் என்று சொல்லி ஆஸ்கார் ஸ்டேஜ்ல பேசுவதை நான் இன்னைக்கும் ரிகர்சல் பண்ணுவேன். அது மட்டும் மாறவே மாறாது.
அது நடக்குது, நடக்கல அது வேற விஷயம். இப்போ இல்ல 9 10 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே தினமும் குளிச்சிட்டு வந்து தலை துவட்டும் போது கூட முதல்ல அதை சொல்லணும், அப்புறம் இதை சொல்லணும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன் என்று நடிகர் மணிகண்டன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





