தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டிருப்பவர் இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி. எல்கேஜி மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சிங்கப்பூர் சலூன் படங்களை தொடர்ந்து இப்போது சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து வருகிறார். அந்த படத்தில் அவரும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, இயக்குனர் சுந்தர் சி எனக்கு ரொம்பவும் பிடித்த இயக்குனர். என்னுடைய குருநாதர் என்று கூட சொல்வேன். அவரை தான் பல விஷயங்களில் நான் பின்பற்றுகிறேன். அவரை போலவே ஜாலியாக ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று நினைப்பேன். மூக்குத்தி அம்மன் ஷூட்டிங்கை கூட நாகர்கோவிலில் அப்படிதான் ஜாலியாக கொண்டு சென்றேன்.
நான் சுந்தர் சி இயக்கத்தில் முதலில் நடித்த படம் தீயா வேலை செய்யணும் குமாரு. அந்த படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில் எனக்கு சரியாக நடிக்க வரவில்லை. பலமுறை முயற்சித்தும் என் நடிப்பு எனக்கே கேவலமாக இருந்தது. உங்களுக்கு பிடிச்சிருந்தால் நடியுங்க, லஞ்ச்க்கு பிறகு ட்ரை பண்ணுங்க, இல்லேன்னா பரவாயில்லே என்றும் சுந்தர் சி என்னிடம் கூறிவிட்டார்.
அப்புறம் சுந்தர் சி எடுத்த ஒரு காட்சியில் 10 15 படங்களில் நடித்த ஒரு நடிகர் ஏகப்பட்ட டேக் வாங்கி சொதப்பினார். அதைப் பார்த்த நான் சுந்தர் சியிடம் போய் நான் நடிக்கிறேன் சார் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அவன் எல்லாம் நடிக்கிறான், நம்மால முடியாதா என்ற கான்பினன்ட் வந்துவிட்டது. இந்த படத்தில் நடித்த போது 6 லட்சம் ரூபாய் சம்பளம் வந்தது. இது என்னுடைய 2 ஆண்டுகால மாத வருமானம். பிறகு பல படங்களில் நடித்தேன்.
நான் நடித்த ஒரு படத்தை சத்யம் தியேட்டரில் பால்கனி முழுக்க 250 டிக்கெட் ரிசர்வ் செய்து என் நண்பர்களை பார்க்க வைத்தேன். கீழே நான் படிக்கட்டு அருகே நின்றிருந்த போது படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர், என்னடா உன் நிலமை இப்படி ஆகிப்போச்சே என்று சொல்லாமல் சொல்வது போல், பரிதாபமான முகபாவனையில் என்னை பார்த்து கையை காட்டி விட்டுச் சென்றனர்.
250 பேரை நானே தியேட்டருக்கு கூட்டி வந்து என்னை அவமானப்படுத்திக் கொண்டது போல் இருந்தது. அப்போது நான் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். இந்த படத்துடன் நடிப்பை விட்டு விலகி விடலாம் என்ற முடிவில் இருந்தேன். ஆனால் நானும் ரவுடிதான் படம் பார்த்த போது ரசிகர்கள், என்னை திரையில் காட்டும் போதெல்லாம் கைதட்டி விசிலடித்து சந்தோஷப்பட்டனர். அதன்பிறகுதான் மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்தேன் என்று ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.





