தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் மற்றும் அஜீத்குமார் விஜய் ஆகிய 4 பேர் மட்டும்தான். டாப் சீனியர் நடிகர்களாக ரஜினியும் கமலும் சீனியர் நடிகர்களாக அஜீத்குமாரும் விஜயும் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் இந்த 4 பேருக்கு மட்டுமே அதிகளவில் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி அதன் தலைவராகி விட்டார். இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துவரும் அவர் இத்துடன் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு, அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறார். தமிழக முதல்வர் ஆவதே தனது லட்சியம் என்ற நிலையில் அவர் இருந்து வருகிறார். அதனால் விரைவில் விஜய் முழுநேர அரசியல்வாதி ஆகி சினிமாவை விட்டு விலகி விடுவார்.
நடிகர் கமல்ஹாசன், ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் கட்சி துவங்கி பல ஆண்டுகளாக அரசியலில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். சினிமாவில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு அரசியலில் கிடைக்காத நிலையில் இப்போது திமுகவின் விசுவாசியாக மாறி விட்டார். அவரும் சினிமாவில் இனி போதிய கவனம் செலுத்த வாய்ப்பில்லை. வயதும் 70 ஆகி விட்டது.
நடிகர் அஜீத்குமார், சினிமாவில் நடிப்பதை காட்டிலும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். பைக் ரேஸ் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் ஹெலிகாப்டர் இயக்குதல் என அவருக்கு விளையாட்டுகளில்தான் அதிக ஆர்வம் இருக்கிறது. அடிக்கடி மாதக்கணக்கில் பைக்கில் வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் டூர் செல்வதே அவரது முக்கிய விருப்பமாக உள்ளது. அதனால் அவரும் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.
நடிகர் விஜயும் கமல்ஹாசனும் அரசியலில் அதிக ஆர்வம் காட்டும் நிலையில், அஜீத்குமாரும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார். டாப் ஸ்டார் நடிகர்களில் மீதம் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. அவரது முழு கவனமும் சினிமாவில் இருந்தாலும் 74 வயதான அவரும் இனி நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அவரும் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொள்ளலாம்.
அதனால் ரஜினி கமல் விஜய் அஜீத்குமாரின் சினிமா பயணம் இப்போது இந்த பாதையில் பயணிப்பதால், அடுத்த கட்டமாக நம்பிக்கை நட்சத்திரங்களாக இளம் நடிகர்கள் சிவகார்த்திகேயன் ஹரீஷ் கல்யாண் மணிகண்டன் கவின் போன்றவர்கள்தான் டாப் ஸ்டார் நடிகர்களாக தமிழ் சினிமாவில் வலம் வர வாய்ப்புள்ளது. சூர்யா விக்ரம் தனுஷ் விஜய் சேதுபதி ஜெயம் ரவி கார்த்தி விஷால் போன்றவர்கள் சமகால நடிகர்களாக டாப் லெவல் நடிகர்களாக உருவாகாமல், 2ம் நிலை வரிசையில் பின்தங்கி விட்டதே இளம் நடிகர்கள் முன்னுக்கு வர காரணமாகி விட்டது.





