மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் அமரன். கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்னும் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி தான் இதன் இயக்குனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் நாயகியாக சாய் பல்லவி வருகிறார்.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படத்தில் ஏற்கனவே வெளியான பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. குறிப்பாக மின்னலே பாடலை பாடலும் தங்கள் ரிங்டோனாக மாற்றினர். இன்ஸ்டாகிராமிலும் அந்த பாடல் தொடர்பான வீடியோ இடம் பெற்று இருந்தது.
அதுமட்டுமில்லாமல் சாய் பல்லவி தொடர்பான முன்னோட்டமும் ரசிகர்களிடம் அதிக அளவு கொண்டு போய் சேர்ந்தது. இந்து ரபேகா வர்கீஸ் என தனது கதாபாத்திரத்தை அவர் அறிமுகம் செய்து வெளிப்படுத்திய வீடியோவிற்கு இங்கு பலரும் லைக்ஸ்களை குவித்தனர்.
இப்படியான சூழலில் தான், அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. முன்னதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்த திரைப்படத்தை பார்த்தனர்.
படம் பார்த்து முடித்த பின்பு படக்குழுவினரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டினார். இந்த நிலையில் ரசிகர்களிடமும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தின் முதல் பாதி அருமையாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சற்று நீளமாக இருந்தாலும் சுவாரசியம் குறையாமல் உள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சி பலரையும் கண்கலங்க வைத்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை என்பதை இந்த திரைப்படத்திலும் நிரூபித்திருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பலர் பாராட்டியுள்ளனர். முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே இதுதான், அதிகபட்ச முதல் நாள் வசூல் என்று கூறப்படுகிறது.





