தமிழ் சினிமா நிறைய சிறந்த கலைஞர்களை கண்டிருக்கிறது. இதில் பல நடிகர்கள் நடிகைகளை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் பொக்கிஷம் போன்ற கலைஞர்களாக தங்களது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கின்றனர்.
அவர்களில் இன்னும் சிலர் வாழ்கின்றனர். சிலர் மறைந்து விட்டனர். ஆனாலும் மறைந்த கலைஞர்களது நடிப்பு என்றென்றும் ரசிகர்களின் மனதை விட்டு மறையாது. அவர்களது புகழும் மங்காது. அந்த வகையில் நடிப்பில் ஒரு ராட்சசனாக இருந்தவர் நடிகர் ரகுவரன். திரையில் ஒரு சூராதி சூரனாக அவர் இருந்தவர் என்றால் அது மிகையல்ல.
நடிகர் கமலுக்கு வில்லன் நாசர் என்றால், ரஜினிக்கு வில்லன் ரகுவரன்தான். குறிப்பாக மனிதன் பாட்ஷா ராஜா சின்ன ரோஜா ஊர்க்காவலன் அருணாசலம் என பல படங்களில் ரஜினியை மிரட்டும் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். 49 வயதில் அவர் மறைந்தது தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புதான். கடைசியாக அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் ரகுவரன், தமிழ் சினிமாவில் பொக்கிஷ நடிகராக வாழ்ந்தவர். இப்போது மலையாள சினிமா புகைப்பட கலைஞர் ஹாசிப் அபிதா ஹக்கீம் என்பவர், நடிகர் ரகுவரனின் வாழ்க்கையை டாக்குமென்டரி படமாக உருவாக்கி வருகிறார். இதற்கு ரகுவரன், காலத்தை வென்ற கலைஞன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ எச் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் இந்த டாக்குமென்டரி படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தில் நடிகர் ரகுவரனின் சாயலில் இருக்கும் அதுல்ஷரே என்பவர், ரகுவரனின் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த டாக்குமென்டரி படத்தில் நடிகர் ரகுவரன் குறித்து அவரது மனைவி நடிகை ரோகிணி, மகன் ரிஷி நடிகர் நிழல்கள் ரவி எழுத்தாளர் இந்துமதி மற்றும் ரகுவரனின் அம்மா, சகோதரர் உள்ளிட்டோரும் பேசி இருக்கின்றனர்.
மேலும் இந்த டாக்குமென்டரி படத்தில் நடிகர் ரகுவரன் நேரடியாக தோன்றும் இதுவரை வெளியாகாத 60 சதவீத வீடியோ காட்சிகளும் இடம்பெறுகின்றன. பல படங்களில் தனக்கு வில்லனாக நடித்த நடிகர் ரகுவரன் குறித்து நடிகர் ரஜினிகாந்தும் இந்த டாக்குமென்டரியில் பேச இருக்கிறார். ரஜினியின் பேட்டிக்காக படக்குழு காத்திருக்கும் நிலையில், அவரது பேட்டி கிடைத்தவுடன் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.





