நடிகர் சூர்யா நடிப்பில் வரும் மே 1ம் தேதி ரெட்ரோ படம் ரிலீஸாகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் நடிகர் சூர்யாவின் 44வது படமாகும். கடந்த 10 ஆண்டுகளில் நடிகர் சூர்யா 12 படங்களில் நடித்திருக்கிறார். இதில் சூரரைப் போற்று ஜெய்பீம் ஆகிய 2 படங்கள் மட்டுமே நேரடியாக ஓடிடியில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றன.
ஆனால் காப்பான் பசங்க 2 சிங்கம் 3 எதற்கும் துணிந்தவன் 24 தானா சேர்ந்த கூட்டம் மாசு என்கிற மாசிலாமணி அஞ்சான் என்ஜிகே மற்றும் கங்குவா என அனைத்து படங்களுமே தொடர் தோல்வி படங்களாக இருந்து பெரிய ஏமாற்றத்தை தந்தன. அதுவும் கடந்தாண்டில் வெளியான கங்குவா சூர்யாவுக்கு கடும் விமர்சனத்தை தந்தது.
இந்த சூழலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். தூத்துக்கடி பாஷை பேசும் கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். ஏற்கனவே சிங்கம் சிங்கம் 2 சிங்கம் 3 படங்களில் தூத்துக்குடி பாஷை பேசி சூர்யா சிறப்பாக நடித்திருந்தார்.
நடிகர் சூர்யாவின் திரை பயணத்தில் ரெட்ரோ படம் நிச்சயமாக திருப்புமுனையாக இருந்து பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் பர்ஸ்ட் சிங்கிள் செகன்ட் சிங்கிள் உள்ளிட்டவை வெளியான நிலையில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க உள்ளது.
சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் வருகிற 18ம் தேதி நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் நேரடியாக மேடையில் இசைக்கலைஞர்களுடன் பாடி ரசிகர்களை மகிழ்விக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் முக்கிய விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வழக்கமாக ரஜினி மற்ற நடிகர்களின் படம் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கமல் இருவருமே பங்கேற்றனர். நடிகர் சிவக்குமார் ரஜினியின் ஆரம்பகால நண்பர். சூர்யா மீதும் ரஜினிக்கு அதிக அன்பு உண்டு. அதே போல் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினி நடித்த பேட்ட படத்தின் இயக்குனர். அதனால் இந்த விழாவில் ரஜினி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.





