நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா. கடந்தாண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் சீனாவிலும் இந்த படம் சக்கைப் போடு போட்டது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான மகாராஜா படத்துக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு தந்தனர்.
மகாராஜா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதே போல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஆகாசவீரன் என்ற படத்திலும் பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார். இந்த 2 படங்களை தவிர மலேசியாவில் எடுக்கப்பட்ட ஏஸ் என்ற அவரது படம் வருகிற மே 23ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படி 3 படங்கள் மக்கள் செல்வனுக்கு கைவசம் ரிலீஸாக உள்ளன.
இந்த சூழலில் நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தபு நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே நடிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இனி விஜய் சேதுபதியின் அடுத்த படம் பூரி ஜெகன்நாத் படம்தானம் என்றும் தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கும் படம்தான் என்று தகவல் வெளியாக உள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குனர் அட்லி தயாரிக்கும் இந்த படத்தில்தான் விஜய் சேதுபதி நடிக்க அடுத்ததாக உள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்க கமிட் ஆன வெப் சீரிஸ் ஒன்றில் இப்போது நடித்து வருகிறார். மதுரையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் துவங்கியுள்ளது.
இந்த வெப் சிரீஸை முடித்த பிறகு உடனடியாக பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். அந்த படத்தை முடித்த பிறகுதான் அடுத்து தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதற்கிடையே டிரெயின் ஏஸ் மற்றும் ஆகாச வீரன் ஆகிய படங்களும் ரிலீஸாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.





