- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி வேண்டவே வேண்டாம்.. அடம் பிடித்த தயாரிப்பாளர்.. படமே வேண்டாம் என சொன்ன மகேந்திரன்

ரஜினி வேண்டவே வேண்டாம்.. அடம் பிடித்த தயாரிப்பாளர்.. படமே வேண்டாம் என சொன்ன மகேந்திரன்

- Advertisement -

இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் ரஜினிகாந்த். நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து சினிமா கல்லூரியில் சேர்ந்து பிறகு கே.பாலசந்தர் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கறுப்பான உருவம், சின்ன கண்கள், தமிழ் சரியாக உச்சரிக்க தெரியாது என ஏகப்பட்ட விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தார்.

ஆனால் தனது திறமையை வளர்த்து பொறுமையாக இருந்த ரஜினிகாந்த் படிப்படியாக முன்னேறினார். ஒருகட்டத்தில் எந்த தமிழ் உச்சரிப்பு கேலி செய்யப்பட்டதோ, எந்த உருவம் நக்கல் செய்யப்பட்டதோ அவை அனைத்தையும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். எங்கு பார்த்தாலும் ரஜினியின் ஸ்டைலை பின்பற்றுபவர்கள் வளர தொடங்கினார்கள். ஏன் இப்போது நடிக்க வருபவர்கள்கூட ரஜினியின் தாக்கம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.

ரஜினிகாந்த் கமர்ஷியல் படங்களால்தான் இந்த நிலைமைக்கு வந்தார் என்பது 90 சதவீதம் உண்மை. அதன் காரணமாக ரஜினிகாந்த்துக்கு நடிக்கவே தெரியாது. வெறும் ஸ்டைலை வைத்து ஓட்டிவிட்டார் என்ற விமர்சனம் பல காலம் இருந்தது. இப்போதும் சிலரிடம் இருக்கிறது. ஆனால் முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபதுவரை உள்ளிட்ட படங்களை பார்த்தா புரியும் ரஜினிகாந்த் எவ்வளவு சிறந்த நடிகர் என்று.

அப்படிப்பட்ட படங்களில் முள்ளும் மலரும் படம் ரஜினி கரியரில் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் படத்தில் காளி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ரஜினி. முரண்டு பிடிக்கும் அண்ணன், ஊரையே தனது கோபத்தால் அச்சப்படவைக்கும் இளைஞன் என அதகளம் செய்யும் ரஜினி தனது ஒற்றை கையை இழந்த பிறகு பக்குவமாக மாறி நிற்கும் இடம், சரத்பாபுவிடம் கெட்ட பய சார் இந்த காளி என வசனம் பேசிவிட்டு மேலே பார்த்து கண் கலங்கும் இடத்தில் அதகளமாக ஸ்கோர் செய்திருப்பார்.

ரஜினி அப்படி நடித்ததற்கு முக்கிய காரணம் இயக்குநர் மகேந்திரன். மகேந்திரன் எப்போதும் எதார்த்தத்தை மீறாதவர். தனது மீட்டருக்குள் ரஜினியை கொண்டு வந்து சிறந்த நடிப்பை வாங்கியிருப்பார். ஏன் ரஜினியின் மேனரிசமும், மகேந்திரனின் மேனரிசமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். ரஜினியேகூட தனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரன் என்று தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தரிடமே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முள்ளும் மலரும் படம் பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிந்துகொள்ளலாம். அதாவது முள்ளும் மலரும் படத்தில் ரஜினியை நடிக்க வைக்க தயாரிப்பாளர் முதலில் சம்மதிக்கவே இல்லையாம். ஆனால் மகேந்திரனோ விடாப்பிடியாக இந்தப் படத்தை இயக்கினால் ரஜினியை வைத்துதான் இயக்குவேன். இல்லை என்றால் இந்தப் படத்தை இயக்கவே மாட்டேன் என கூறியிருக்கிறார்.

மகேந்திரனின் பிடிவாதத்தை தளர்த்த முடியாமல் அரைகுறை மனதோடு முள்ளும் மலரில் ரஜினி நடிக்க ஒத்துக்கொண்டாராம் தயாரிப்பாளர். ஆனால் அதன் பிறகு ரஜினியின் நடிப்பை பார்த்து தயாரிப்பாளர் பிரமித்து போய்விட்டாராம். இதனையடுத்து மகேந்திரன் ரஜினியை வைத்து ஜானி படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் ரஜினியின் கரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன. அப்படி பிடிவாதமாக இருந்து ரஜினியை முள்ளும் மலரில் நடிக்க வைத்து இந்த சமூகத்துக்கு ரஜினி மிகச்சிறந்த நடிகன் என காட்டிய மகேந்திரனின் 84ஆவது பிறந்தநாள் இன்று.

சற்று முன்