தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற இளம் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் கைதி விக்ரம் மாஸ்டர் லியோ படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி பான் இந்தியா படம் வருகிற 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
கமலுக்கு விக்ரம் படம் மாஸ் ஹிட் ஆக இருந்தது போல ரஜினிக்கு கூலி படத்தை பிளாக்பஸ்டர் படமாக தருவதில் லோகேஷ் கனகராஜ் முனைப்புடன் செயல்பட்டு இருக்கிறார். 2 ஆண்டுகளாக இந்த படத்துக்கு தேவையான அனைத்து உழைப்பையும் தந்திருக்கிறேன் என்று அவரே கூறியிருக்கிறார். மேலும் இதில் வித்யாசமான ரஜினியை ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
கூலி படத்தில் மல்டிபில் ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மலையாள நடிகர் சௌபின் சாஹிர் தமிழ் நடிகர் சத்யராஜ் இந்தி நடிகர் அமீர்கான் கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு அனிருத் இசைமைத்துள்ளார்.
கூலி படம் ரிலீஸாக 5 நாட்கள் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். கூலி படத்தில் மூன்று நிமிடம் ரஜினிகாந்த் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி இடம்பெற்று இருப்பதாக ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் படத்தின் மற்றொரு முக்கிய அப்டேட்டையும் லோகேஷ் கனகராஜ் இப்போது தந்திருக்கிறார். கூலி படத்தில் வரும் இடைவேளை திருப்புமுனையாகவும் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளைக் காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று இயக்குனர் லோகேஷ் கனராஜ் தெரிவித்திருக்கிறார். இது கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
இதற்கிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்று தீர்ந்துள்ளன. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.





