நடிகர் அஜீத்குமாருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் அஜீத்குமார் உள்ள பலருக்கும் பத்ம விருதுகளை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தன் கரங்களால் வழங்கி கௌரவித்தார்.
இந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன், மகளுடன் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்டோருடன் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
தனக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் அஜீத்குமார் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது குடும்பம் குறிப்பாக தனது மனைவி ஷாலினி அளித்த ஊக்கமும் உற்சாகமும் இந்த வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் துவங்கி இப்போது வரை நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் கலந்துக்கொண்டு வருகிறார். இதுவரை 4 முறை இந்த போட்டிகளிலும் அவரும் அவரது அஜீத்குமார் கார் ரேஸிங் அணி சார்ந்த வீரர்களும் வெற்றி பெற்று வருகின்றனர். வருகிற அக்டோபர் வரை இந்த கார் பந்தயங்களில் நடிகர் அஜீத்குமார் பங்கேற்கிறார்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த விருது விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் பத்மபூஷன் விருதை பெற்ற நிலையில் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது திரையுலக நண்பர்களும் பல பிரபலங்களும் நேரிலும் சமூக வலைதளங்களிலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தற்போது நடிகர் அஜீத்குமார் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் முழு உடல் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பத்மபூஷன் விருது பெற்று அவர் சென்னை திரும்பிய நிலையில் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை பதற்றமடைய செய்திருக்கிறது. விரைவில் அவரது உடல்நலம் குறித்த தகவலை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





