தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத் குமார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக கார் ரேஸில் பங்கேற்று வரும் நடிகர் அஜீத்குமார் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சார்பில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த பத்மபூஷன் விருதை நடிகர் அஜீத்குமாருக்கு வழங்கினார். இதையடுத்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் அஜீத்குமார் வெளிப்படையாக தனது கருத்துக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக அரசியல் சார்ந்த தனது எண்ணங்களையும் வெளிப்படுத்தினார்.
அப்போது நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, எனக்கு அரசியல் தொடர்பான லட்சியம் எதுவும் கிடையாது. அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ஜனநாயகத்தில் உள்ள சிறப்பான விஷயம் என்னவென்றால் மக்கள் தங்களுக்கான தலைவர்களை தாங்களே தேர்ந்தெடுக்கின்றனர். திரைத்துறையில் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்து தங்களால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தால் அவர்களை நான் மனதார வாழ்த்துகிறேன்.
மக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அதில் நிறைய விமர்சனங்களை கூறலாம். ஆனால் சினிமாவை சேர்ந்த எவரும் மோசமான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. வெற்றிக்கான பார்மூலா தெரிந்து விட்டால் அனைத்து படங்களும் வெற்றி படங்களாகி விடும். அதேபோன்றுதான் அரசியலும். வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது மிகவும் எளிது. ஆனால் களத்தில் இருப்பவர்களுக்கு தான் அதில் இருக்கும் கஷ்டம் தெரியும்.
நாம் 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் இருக்கிறோம். பல மொழிகள் பல மதங்கள் பல ஜாதிகள் இருக்கின்றன. எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திப்படுத்துவது கடினம். நான் ஜனாதிபதி மாளிகையில் இருந்த போது அங்கு எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை பார்த்தேன். அரசியல்வாதிகள் தினந்தோறும் இவற்றை கடந்து வருகிறார்கள். உண்மையில் அது மிகவும் கடினமான பணி. அரசியல் தொடர்பாக நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவது கிடையாது. ஒரு மாநிலத்தை அல்லது ஒரு நாட்டை தங்கள் தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு.
பலர் சரியான நோக்கங்களுக்காகவும் சில தவறான நோக்கங்களுக்காகவும் அரசியலில் இருக்கின்றனர். ஒருவர் அரசியலுக்கு வருவது என்பது 100 சதவீதம் துணிச்சலான முடிவு என்று நடிகர் அஜீத்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள தனது சக நடிகர் நண்பர் விஜய்க்கு மறைமுகமாக அஜீத்குமார் தனது பாராட்டுகளை கூறி இருப்பது தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.





