தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பெரிதும் நம்பியிருப்பது இந்த 4 நடிகர்களை தான் என்றால் அது மிகையல்ல. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் என்கிற இந்த 4 நட்சத்திரங்களும்தான் தமிழ் சினிமாவில் துருவ நட்சத்திரங்களாக வியாபாரத்தில் ஜொலிக்கின்றனர்.
இதில் ரஜினிகாந்த் 74 வயதான நிலையில் நடிப்பதால், அவருக்கான கதைகளில் மட்டுமே அவர் நடிக்க முடியும். இளம் ஹீரோக்களின் கேரக்டர்களில் அவர் நடிக்க முடியாது. அதனால் அவரது ஸ்டைல் கேரக்டர் என்பது கவனமாக உருவாக்கப்பட வேண்டும். அவருக்கான கதை திரைக்கதை களத்தில் படம் செய்ய எல்லா இயக்குனர்களாலும் முடியாது.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் சினிமா என இரண்டிலும் கால் பதித்திருக்கிறார். கமல் படங்களை இயக்க வேண்டும் என்றால் அந்த படத்தில் 70 சதவீதம் அவர்தான் இயக்குனராக இருப்பார். அதனால் அவரை வைத்து படம் இயக்குவது என்பது அனைவராலும் முடியாது. இதில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்வதால் அவர் இந்த லிஸ்ட்டில் இனி வரமாட்டார்.
அடுத்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நாடி வருவது நடிகர் அஜீத்குமாரை தான். ஆனால் அவரும் கார் ரேஸ் பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் என விளையாட்டுகளில் அதிக ஆர்வமாக இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை தனது 2வது ஹாபியாக தான் அவர் வைத்திருக்கிறார்.
இப்போது வெளிநாடுகளில் நடந்துவரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள அவர், அடுத்து நடிக்கப் போகும் படம் குறித்த கேள்வி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. ஏனெனில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை தந்திருக்கிறது. அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் தனுஷ் இயக்குனர்கள் வெங்கட்பிரபு விஷ்ணுவர்தன் சிறுத்தை சிவா என பலரும் அந்த லிஸ்ட்டில் உள்ளனர். இதில் தனுஷ் பெயர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமார் நேர்காணல் ஒன்றில் கூறுகையில், எனது அடுத்த படம் குறித்து அந்த அறிவிப்பு வரும்போது தெரிந்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அவர் தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் அந்த படத்தையும் தயாரிக்கிறது. வருகிற செப்டம்பரில் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.





