ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுவரை இந்த படமானது 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் இருந்து தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் ரஜினியின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர். அது மட்டுமின்றி இனி ரஜினி வரிசையாக ஹிட் படங்களை கொடுப்பார் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு பிறந்திருக்கிறது.
ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் கமிட் ஆனார். அதன்படி லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்க ஜெய் பீம் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து இருளர் இன மக்கள் குறித்து சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பிய பத்திரிகையாளர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டானார்.
இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஏனெனில் ஞானவேல் கண்டிப்பாக ஒரு படம் எடுத்தால் அதில் எப்படியும் ு சமூகத்திற்கு தேவையான விஷயம் இருக்கும் அதுமட்டுமின்றி அந்தப் படத்தில் காத்திரமான அரசியலும் இருக்கும் என்பதை தனது முதல் படத்திலேயே நிருபித்து விட்டார். எனவே ரஜினி இவரது இயக்கத்தில் நடிப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் அவருக்கு பாராட்டையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.
இப்படமும் ஜெய் பீம் போலவே உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ரஜினிகாந்த் இதில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக நடிக்கிறாராம். அது மட்டும் இன்றி இதில் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும் பேசப்படுகிறது. நாட்டில் இஸ்லாமியர்கள் மீது சகிப்புத்தன்மை பெரும்பாலானவர்களுக்கு குறைந்து வரும் நேரத்தில் ரஜினி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
படத்தின் ஷூட்டிங் நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் நடக்க இருக்கிறதாம்.மேலும் கொச்சியில் செட் போட்டு முதற்கட்ட படப்பிடிப்பை முடிக்க ஞானவேல் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதில் நடிப்பதற்காக நடிகர்கள் தேவை என்று சமீபத்தில் விளம்பரமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகிற 26ஆம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் படத்தின் பூஜை நடக்கும் என்றும் அதில் லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.





