அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு, அடுத்ததாக மதராஸி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கு நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரித்துள்ளது. கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்க, பிஜு மேனன், வித்யூட் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதை எடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும், மதராசி திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தன. பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அதற்கு முன்னதாக முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்க்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற திரைப்படங்களும் பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் மதராசி திரைப்படம் முருகதாஸுக்கு ஓரளவு நல்ல பெயரை பெற்று கொடுத்திருப்பதாகவே சொல்கிறார்கள். பெரும் திருப்புமுனையாக அது அமையவில்லை என்றாலும், சில காட்சிகளை அவர் பிரமாதமாக கையாண்டிருப்பதாக பேசுகிறார்கள்.
முதல் பாதி காதலுடன் சேர்ந்து ஆக்சன் காட்சிகளும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்சன் ரகத்திலும் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் சற்று மனநல பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை சீன்களிலும் அவர் மிரட்டி இருப்பதாக சொல்கிறார்கள்.
இதேபோன்று துப்பாக்கி வில்லன் வித்யூத்தூக்கும், மதராசி திரைப்படத்தில் மிரட்டலான காட்சிகள் அமைந்திருக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் ஒரு சண்டைக் காட்சியில், வித்யூத்திற்கே விசில் பறக்கின்றன. கஜினி மற்றும் துப்பாக்கி ஆகிய திரைப்படங்களை கலவையாக கொடுக்க முயற்சி செய்திருக்கும் முருகதாஸ் இன்னும் அதில் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் மதராசி மிகப்பெரிய வெற்றிப்படமாக வந்திருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அந்த திரைப்படத்திற்கு வார இறுதி நாட்களில் பலரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்தனர். இதன் காரணமாக திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டும், 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் இந்த தொகையை அந்த திரைப்படம் ஈட்டி உள்ளது. வரும் நாட்களிலும் மதராசி சற்று வசூல் குவிக்கும் என கூறப்படும் நிலையில் விரைவில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டும் என பேசிக்கொள்கிறார்கள்.





