தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நடிகராக இருந்து வருகிறார். தமிழில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் அவர் மட்டுமதான். சீனியர் நடிகர்களான ரஜினி கமல் கூட இன்னும் அவர்களது சம்பளத்தில் ரூ. 150 கோடியை தாண்டவில்லை. சக நடிகரான அஜீத்குமார் மட்டுமே குட் பேட் அக்லிக்கு ரூ. 163 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டில் துவங்கிய விஜய், அப்போது தி கோட் என்ற தனது 68வது படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வந்தார். நான் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன். 69வது படம்தான் என்னுடைய கடைசி படமாக இருக்கும் என்றும் தெளிவாக அறிவித்து விட்டார்.
அதன்படி தி கோட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் கமிட் ஆன அவரது 69வது படம்தான் ஜனநாயகன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபரில் துவங்கியது. சென்னை பையனூர் பகுதிகளில் பெரும்பாலான படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இப்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தாண்டிக்குடி என்ற இடத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் இப்போது ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்து வருகிறார். பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் பூஜா ஹெக்டே தான் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் கோபிசந்த் மாலினேனி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, நடிகர் விஜய் நான் சொன்ன கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டார். அதன் பின் அந்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட அதற்கான பணிகளை நான் செய்து வந்தேன்.
அப்போது திடீரென அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். கடைசி படம் என்பதால் தெலுங்கு இயக்குனர் வேண்டாம் என பலரும் அவரிடம் வலியுறுத்தி கூறியுள்ளனர். அதனால்தான் என் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் முடிவு செய்து இருக்கிறார். அதனால் என்னை வேண்டாம் என நடிகர் விஜய் கூறிவிட்டார் என கோபிசந்த் மாலினேனி அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஆனால் தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம், தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று பல மாதங்களாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.





