நடிகர் சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை படங்களை போல சில காட்சிகளில் ரெபரென்ஸ் இருந்தாலும் உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களில் இது தவிர்க்க முடியாதது என நடிகர் சூரியே வெளிப்படையே கூறிவிட்டார்.
இந்த படத்தை விலங்கு என்ற வெப் சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜன் டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் படத்தின் கதையை நடிகர் சூரியே எழுதியிருக்கிறார். தன் அப்பாவின் கதையை டைரக்ட் செய்யும் ஒரு எதிர்கால திட்டமும் நடிகர் சூரிக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படம் அவருக்கு ஒரு முன்னோட்டமாக வெற்றியை தந்திருக்கிறது.
விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி மாமன் படங்களை தொடர்ந்து சூரி அடுத்ததாக மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மீனவர்களின் வாழ்க்கை பற்றிய கதைக்களத்தில் அமைந்திருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிசெய்த மதிமாறன் புகழேந்தி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சூரி கூறியதாவது, என்னோட உண்மையான பெயர் ராமன். நான் தீவிரமான ரஜினி ரசிகன். தளபதி படத்தில் ரஜினி சாரின் பெயர் சூர்யா என்று இருக்கும். மம்முட்டி சார் ரஜினியை சூர்யான்னு கூப்பிடுறது அழகா இருக்கும். அதை பார்த்து நானும் என்னோட பேரை சூர்யா என்று மாற்றி விட்டேன்.
தளபதி படம் பார்த்துட்டு வீட்டுக்கு போனதும் என் அம்மாகிட்ட இனிமேல் என்னை சூர்யான்னு தான் கூப்பிடனும் என்று சொல்லிட்டேன். என் அம்மா அது யாருன்னு கேட்டாங்க. சூர்யான்னு சொல்லச்சொன்னது ஒரு கட்டத்தில் சூரின்னு மாறிடுச்சு. இதுவே நல்லா தான் இருக்குன்னு அப்படியே வச்சுக்கிட்டேன் என கூறியிருக்கிறார் நடிகர் சூரி.
இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சூரி. எனவே இவருக்கு ராமன் என்றும் இவரது தம்பிக்கு லட்சுமணன் எனவும் அவரது பெற்றோர் பெயர் வைத்தனர். ரஜினிகாந்த் நடித்த தளபதி படம் பார்த்த விட்டு சூர்யா என பெயரை மாற்றிக் கொண்ட அவர் இப்போது சூரி என மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். என் பேரை மாத்தியதே ரஜினி படம்தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூரி.





