நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 69வது படம். இந்த படம்தான் அவரது கடைசி படம். அதன்பிறகு அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறார்.
அதனால் விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது. அதே போல் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதிலும் ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சினிமா தயாரிப்பாளர்களான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ் எஸ் லலித்குமார் ஆகிய இருவருமே தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் ஜனநாயகன் படத்தை வெளியிட ரூ. 100 கோடி விலை தர தயாராக இருக்கின்றனர்.
இவர்கள் இருவருமே நடிகர் விஜய்க்கு நண்பர்கள் என்பதால், அவரை இந்த விஷயத்தை முடிவு செய்யுமாறு ஜனநாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதனால் நடிகர் விஜய் அந்த இருவரில் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். ஆனால் படம் வெளியாகப் போவது அடுத்த ஆண்டு பொங்கலுக்குதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தை இயக்கி வரும் எச் வினோத், படத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக்தான் ஜனநாயகன் படம் என்ற தகவலும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.
இப்போது புதிய தகவலாக இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் முழுமையாக வாங்கி விட்டதாகவும், அதில் இருந்து குட் டச் அண்ட் பேட் டச் என்ற ஒரு பகுதியை மட்டும் ஜனநாயகன் படத்தில் சேர்க்க இருப்பதாகவும், படம் வெளியான பிறகு இதில் சட்ட சிக்கல் பிரச்னை எதுவும் வராமல் தவிர்க்கவே, பகவந்த் கேசரி படத்தின் ரீ மேக் உரிமையை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயின் கடைசி படம் தெலுங்கு படத்தின் ரீமேக் படமா என்று தளபதி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





