தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களாக இருந்தாலும் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன். ரஜினிக்கு 74 வயதாகிறது. கமலுக்கு 70 வயதாகிறது. இதுவரை ரஜினி 170 படங்களில் நடித்து அந்த படங்கள் வெளியாகி உளளன. இப்போது அவரது 171 வது கூலி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. 172வது படமாக ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கும் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குகிறார். இது 237வது படமாகும். அப்படி என்றால், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ள தக்லைஃப் படம் கமல்ஹாசனின் 236 வது படம் என்று நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
இதன்படி தமிழ் மற்றும் மலையாளம் இந்தி தெலுங்கு என பிற மொழிகள் உள்பட சினிமாவில் அதிக படங்களில் நடித்த ஹீரோ கமல்ஹாசனாக தான் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் கமல்ஹாசன் தொடர்ந்து சினிமாவில் இயங்கிக் கொண்டே இருக்கிறார். தொடர்ந்து அரசியல் களத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக அவரது சுறுசுறுப்பான பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கை பெற்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசியலில் இருந்தாலும், மக்கள் விருப்பத்திற்காக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் முதல்வரான பிறகு மக்கள் நலப் பணிகள் நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் அதிக கவனம் செலுத்த துவங்கிய பின் அவர் சினிமாவை மறந்துவிட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தினார்.
இப்போது அரசியல் தலைவராக களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் 70 வயதான நிலையில் சினிமா அரசியல் என இரட்டை குதிரைகளில் சவாரி செய்கிறார். சமீபத்தில் அவரிடம் சினிமாவில் உங்களுக்கு ஓய்வு எப்போது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நடிகர் கமலஹாசன் கூறியதாவது, சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். கதைகள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபடுவேன். இந்த பொறுப்பில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அது அணையும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன் என்று நடிகர் கமலஹாசன் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.





