நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து, நடித்து பின், ஹீரோவாகி முன்னுக்கு வந்தவர். பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்கள், விஜய் சேதுபதிக்கு நல்ல அறிமுகத்தை, ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது.
தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் அவர் நடித்த பல படங்கள் அவருக்கு ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தர்மதுரை, நானும் ரவுடிதான், காதலும் கடந்து போகும், காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் வேதா, சேதுபதி, சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களால் மிகப்பெரிய நடிகராக மாறினார் விஜய் சேதுபதி.
ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்ட விஜய் சேதுபதி, பேட்ட படத்தில் ரஜினிக்கும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்தார். தொடர்ந்து விக்ரம், ஜவான் படங்களிலும் வில்லனாக நடித்த அவர், விடுதலை படத்திலும் ஆண்டி ஹீரோ கேரக்டர்தான் ஏற்றிருந்தார். இப்படி வில்லனாக நடித்தாலும், அவ்வப்போது ஹீரோவாகவும் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீப சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி நடித்த சில படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. குறிப்பாக பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படம், 2வது நாளிலேயே சினிமா தியேட்டரில் ஆபரேட்டரை தவிர யாருமில்லை என்ற அவல நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அவர் மகன், சூர்யா விஜய் சேதுபதியும் இப்போது ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். பீனிக்ஸ் என்ற அனல் அரசு இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையே ரூ. 15 கோடி சம்பளம் என்றால், எந்த மொழி படத்திலும் எந்த ஹீரோவுக்கும் வில்லனாக நடிக்க தயார் என, போஸ்டர் ஒட்டாத குறையாத நடிகர் விஜய் சேதுபதி அறிவித்திருந்தார். ராம்சரண் நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் கூட விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வந்தது.
இந்நிலையில், கோவாவில் நடந்துவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் விஜய் சேதுபதி, இனிமேல் படங்களில் வில்லன் கேரக்டர்களில் நான் நடிக்க போவதில்லை. அந்த படங்களில் ஹீரோ இமேஜ் பாதிக்காமல் இருக்க, வில்லனாக நடிக்கும்போது பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இது தனக்கு பிடிக்காததால், இனிமேல் வில்லன் கேரக்டரில் நடிக்கப் போவது இல்லை என்று கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.





