மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான தக்லைஃப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் எஸ்டிஆர் 49 எஸ்டிஆர் 50 எஸ்டிஆர் 51 ஆகிய 3 படங்களில் நடிக்க தயாராக இருந்தார். ஏற்கனவே இதற்கான ப்ரீ புரடக்சன் பணிகளும் துவங்கியிருந்தன.
இந்நிலையில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாகவும், டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் இருந்தது. ஆனால் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கிய ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகி விட்டார். அதனால் எஸ்டிஆர் 49 படம் கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து தக்லைஃப் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்துக்கு எஸ்டிஆர் 49 என பெயர் வைப்பதாக இருந்தது. ஆனால் தக்லைஃப் படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் அரண்டுபோன நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவில்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் அந்த படமும் நின்று போய்விட்டது.
இந்த சூழலில் நடிகர் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 50 படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஒரு சரித்திர கால படமாகும். 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்வதாக இருந்தது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகர் சிம்புவின் அட்மின் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் தக்லைஃப் படத்துக்கு கிடைத்த மோசமான தோல்வியால், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து விலகி விட்டது. அதனால் எஸ்டிஆர் 50 படத்தை எடுப்பதில் பட்ஜெட் காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் இல்லாததால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் இப்போதைக்கு சிம்பு எஸ்டிஆர் 50 படத்தில் நடிக்க வாய்ப்பில்லாத சூழல் உருவாகி விட்டது.
அதனால் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு எஸ்டிஆர் 50 என தற்காலிக பெயர் வைக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் வெங்கட்பிரபு, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகியிருக்கிறார். ஒருவேளை சிவகார்த்திகேயன் படத்தை துவங்க தாமதம் ஆகும் என்றால், அதற்கு முன்பாக சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 50 படப்பிடிப்பை வெங்கட்பிரபு துவங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது.





