தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா, விஜயா என்ற சர்ச்சை கிளம்பும் அளவுக்கு ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் அசுரத்தமான வசூலில் இப்போதைக்கு மன்னன் யார் என்றால் அது நடிகர் விஜய்தான். அதை கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விஜய் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
இதில் விமர்சன ரீதியாக தோல்வி படம் என்று சொல்லப்பட்ட விஜய் நடித்த சில படங்கள் கூட வசூலை வாரி குவித்தது என்றால் அது மிகையல்ல. இப்போது உருவாகியுள்ள விஜயின் 69வது படம் ஜனநாயகன், வரும் 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் திரைக்கு வருகிறது. இந்த விஜயின் கடைசி படம் என்பதால் 1000 கோடி ரூபாய் வசூலை தொடுமா, என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயை, இப்போது அரசியல் களத்தில் நிற்கும் சில நடிகர்கள் சீண்டி பார்த்து வருகின்றனர். வெளிப்படையாகவே விஜய் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதனால் தேர்தல் களத்தில் விஜய்க்கு எதிரான கருத்துகளை இவர்கள் பேசுவார்கள் என்பது இப்போதே உறுதியாகி விட்டது.
குறிப்பாக திமுக ஆதரவில் ராஜ்யசபா எம்பி ஆக உள்ள நடிகர் கமல்ஹாசன், விஜய்க்கு எதிரான தனது கருத்துகளை தேர்தல் களத்தில் பேசுவார். ஏற்கனவே பாயாசம் பாசிசம் குறித்து பாதரசம் பேசுகிறது என விமர்சித்த காமெடி நடிகர் கருணாஸ்சும் திமுகவுக்கு ஆதரவாக விஜயை விமர்சிப்பது உறுதியாகி விட்டது. நடிகர் வடிவேலுவும் சமீபத்தில் திமுகவுதான் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயிக்கும் என பேசியிருக்கிறார்.
ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 1996ம் ஆண்டில் துவங்கி 20 ஆண்டுகளாக அரசியல் நடத்தி வரும் நடிகர் சரத்குமாரும், விஜய்க்கு எதிராகவே பேசுவார். ஏனெனில் பாஜக கட்சியுடன் அவர் இணைந்திருக்கிறார். அத்துடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் நடிகர் சீமான், விஜய் குறித்து ஏற்கனவே வாட் ப்ரோ ராங்க் ப்ரோ என தாறுமாறாக மேடைகளில் பேசி வருகிறார்.
இப்போதைக்கு நடிகர்கள் கமல்ஹாசன் கருணாஸ் சரத்குமார் சீமான் வடிவேலு உள்ளிட்டோர் விஜய்க்கு எதிராக பேசி வருகின்றனர். இதுதவிர திமுகவின் தீவிர ஆதரவாளராக உள்ள சத்யராஜ் மகள் திவ்யாவும் திமுகவில் சமீபத்தில் இணைந்துள்ளார். இப்போது திவ்யாவும் அவரது பங்குக்கு நடிகர் விஜய் குறித்தும் தவெக குறித்தும் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகிறார். இப்போதைக்கு 6 பேர் தேர்தல் களத்தில் விஜய்க்கு எதிராக மூர்க்கமாக வாள் வீச தயாராக இருக்கின்றனர். இன்னும் கலைத்துறையில் எத்தனை பேர் வரப்போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் விஜயின் இளைஞர் படை இந்த எதிர்ப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்குமா என்பதை தேர்தல் முடிவுகள்தான் சொல்லும்.





