தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்ப கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அது அன்று முதல் இன்று வரை தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மற்றும் நடிகர் விசு பல குடும்ப கதைகளை யதார்த்தமான கதைக்களத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தார்.
குறிப்பாக விசு இயக்கத்தில் வெளியான சம்சாரம் அது மின்சாரம் பெண்மணி அவள் கண்மணி திருமதி ஒரு வெகுமதி குடும்பம் ஒரு கதம்பம் மணல்கயிறு வேடிக்கை என் வாடிக்கை வரவு நல்ல உறவு என விசு இயக்கிய பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதுமே அவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நின்று பேசியது.
இயக்குனர் விசுவை போலவே பல குடும்ப கதைகளை காமெடி கலந்து சொன்னவர் இயக்குனர் வி சேகர். கடந்த 1990களில் வி சேகர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக இருந்தன. அதே நேரத்தில் ரசிகர்கள் கொண்டாடும் சின்ன பட்ஜெட் படங்களாகவும் இருந்தன. குறிப்பாக ஒண்ணா இருக்க கத்துக்கணும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் வரவு எட்டணா செலவு பத்தணா நான் பெத்த மகனே பொங்கலோ பொங்கல் விரலுக்கேத்த வீக்கம் காலம் மாறிப்போச்சு என பல படங்கள் வி சேகரின் படங்கள்தான்.
தயாரிப்பாளர் எம் நாகரத்தினம் தயாரித்து அவரே நடித்த படம் வள்ளிமலை வேலன். இயக்குனர் எஸ் மோகன் கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார். கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள வள்ளிமலை வேலன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் வி சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்த விழாவில் இயக்குனர் வி சேகர் பேசியதாவது, வள்ளிமலை வேலன் படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன் தான் சீசன் போல. அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது. சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்போது படம் எடுப்பது பாதி வேலைதான். அதை பிரமோட் செய்வதுதான் முக்கிய வேலையாக உள்ளது. அதை சரியாக செய்ய வேண்டும்.
நாங்கள் படம் எடுக்கும்போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 தியேட்டருக்கு மேல் தர மாட்டார்கள். ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி 1000 திரையரங்குகளில் பெரிய படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும்? இந்த நிலை மாற வேண்டும் என்று அந்த விழாவில் இயக்குனர் வி சேகர் ஆவேசமாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





