தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சரவணன். ஆரம்பத்தில் தாய் மனசு அபிராமி பார்வதி என்னை பாரடி சூரியன் சந்திரன் சந்தோஷம் என பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். பிறகு அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்புவாக செவ்வாழை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் சரவணனுக்கு கம்பேக் கொடுத்தது.
தொடர்ந்து கோலமாவு கோகிலா ஜெயிலர் ராயன் கடைக்குட்டி சிங்கம் அரண்மனை மருத உள்ளிட்ட பல படங்களில் சரவணன் நடித்து வருகிறார். இப்போது ஜீ5 ஓடிடி தளத்தில் சரவணன் நடிப்பில் வெளியாகி உள்ள சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸ் அதிக கவனம் பெற்றிருக்கிறது. இதில் சரவணன் பிரதான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நடிகர் சரவணன் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு குணச்சித்திர வேடத்துக்கு மாறிவிட்டார். சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒருமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக்கொண்டார். கல்லூரியில் படித்த காலத்தில், பஸ்சில் பெண்களை உரசவும் இடிப்பதற்கும் என்றே பெண்கள் கூட்டமாக உள்ள பஸ்களில் செல்வேன் என்று சரவணன் கூறியதால், பிக்பாஸ் வீட்டில் இருந்த சரவணன், அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 1990களில் வெளியான படம் காதல் கோட்டை. இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையில் உருவான இந்த படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. அஜீத்குமார் தேவயானி காதலர்களாக நடித்த இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அஜீத்குமார் தேவயானி இருவருக்கும் இந்த படம்தான் அவர்களது சினிமா பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருந்தது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் சரவணன் காதல் கோட்டை படம் குறித்து பேசியிருக்கிறார். நடிகர் சரவணன் கூறியதாவது, என்னுடைய சினிமா வாழ்க்கையில் பல படங்களை நான் தவற விட்டிருக்கிறேன். அதில் ஒன்றுதான் காதல் கோட்டை படம். இந்த படம் எனக்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த படத்தின் இயக்குனர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொன்னார்.
ஆனால் யாருக்குமே படம் குறித்த நம்பிக்கை வரவில்லை. அந்த படத்தில் பல ரயில் காட்சிகள் இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என்று சொன்னார்கள். ஒரு முறை காதல் கோட்டை படத்தின் கதையைக் கேட்ட ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. கடைசியில் நான் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்த வாய்ப்பு கடைசியில் நடிகர் அஜீத்குமாருக்கு போனது என்று நடிகர் சரவணன் கூறியிருக்கிறார்.





