தெலுங்கு சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவே போற்றும் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் ராஜமௌலி. ஸ்டுடென்ட் நம்பர் 1 எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு வெற்றியை தேடி கொடுக்க, தொடர்ந்து கமர்சியல் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார் ராஜமௌலி.
கொஞ்சம் கொஞ்சமாக கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவராக மாறிய அவருக்கு, மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது மகதீரா திரைப்படம். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக வந்தார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். பூர்வ ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டும் அதில் காதலைப் புகுத்தியும் மிக சுவாரஸ்யமாக கதையை கூறியிருந்தார் ராஜமௌலி.
இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் ஏராளமான திரைப்படத்தை அவர் இயக்கி விட்டார். இதில் மிக முக்கியமாக பாகுபலி படத்தைக் கூறலாம். அதன் முதல் பாகமும் சரி இரண்டாம் பாகமும் சரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வகையில் கமர்சியல் ரீதியாக திரைக்கதையை நகர்த்தியிருந்தார் ராஜமவுலி.
இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தெலுங்கு சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பாகுபலி திரைப்படத்தின் தாக்கம் இந்திய சினிமா வரை எதிரொலித்தது. ஆயிரம் கோடி ரூபாய் வசூலும் ஈட்டி சாதனை படைத்தது. தொடர்ந்து அவர் இயக்கிய ஆர் ஆர் ஆர் திரைப்படமும், உலக சினிமா வரை சென்றது.
ஆம் அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்தது. ராஜமௌலி இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் நான் ஈ. தெலுங்கில் இது ஈகா என்ற பெயரில் வெளியானது. ஒரு ஈ, வில்லனை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் இதன் ஒன்லைன் வரி. எந்த வகையிலும் சாத்தியப்படாத இந்தக் கதையை ஃபேன்டசி முறையில் அழகாக கூறி வெற்றிப்படமாக்கினார் ராஜமவுலி.
இதன் வி எஃப் எக்ஸ் காட்சிகளும் கிராபிக்ஸ்களும் உருத்தாத வகையில் அழகாக படம் எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜமௌலி, தனது சிறந்த திரைப்படம் நான் ஈ தான் என்று கூறியிருக்கிறார். ஜூனியர் என்டிஆர்-ஐ வைத்து நான் எடுத்த சிம்மாதிரி திரைப்படம், அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத போது, நான் கமர்சியல் படங்களே எடுப்பதற்கு தகுதியற்றவன் என்ற ஒரு பேச்சு எழுந்ததாகவும் இதை மாற்றும் வகையிலேயே நான் ஈ திரைப்படத்தை எடுத்தேன் என்றும் அவர் காரணத்தை அடுக்கியிருக்கிறார்.





