ஜெயிலர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்தார். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருந்த இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் தான் இந்த படத்தின் டைரக்டர். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் அமிதாபச்சன் நடிக்கிறார். இது போக மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றது. போலி என்கவுண்டர் மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான சூட்டிங் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக கிட்டத்தட்ட ஆறு மாதம் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் லோகேஷ். தனது முந்தைய திரைப்படம் போல் இது இருக்காது என்றும் சோதனை முயற்சியில் இந்த படத்தை எடுக்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதேபோல, இது எல் சி யு வில் வராது என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது திரைப்படங்கள் அனைத்தும் போதைப்பொருள் சம்பந்தப்பட்டதாகவே இருக்க இந்த படத்தில் அது இருக்காது என்றும் கூறப்பட்டது. இப்படி சூழலில் சமீபத்தில் ரஜினிகாந்த் படத்தின் போஸ்டர் வெளியானது.
அதில் கை முழுக்க வாட்ச் கட்டி இருந்து, சிரித்தபடி இருந்தார் ரஜினிகாந்த். அவர் இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. இப்படியான சூழலில், படத்தில் அவர் தங்கத்தை கடத்தும் நபராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் டைட்டில் அடுத்த மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.





