சூர்யாவுக்கு கடந்த மே மாதம் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் படத்தைப் பார்த்த பலரும் இது இணையத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அளவுக்கு இல்லை என்றும், நன்றாகவே உள்ளது என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.
படக்குழுவும் இந்த திரைப்படம் நல்ல லாபத்தை கொடுத்து இருப்பதாகவே தெரிவித்தது. திரையரங்கு ஓடிடி என அனைத்து வர்த்தகத்தையும் சேர்த்து 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக குறிப்பிட்டது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திற்காக, ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்தார் சூர்யா. இந்த அறிவிப்பே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை அவரே எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த திரைப்படம் அவருக்கு கை நழுவி போனது. இதனைத் தொடர்ந்து திரிஷாவை வைத்து மாசாணி அம்மன் என்னும் திரைப்படத்தை அவர் இயக்குவதாக இருந்தது.
ஆனால் அதில் சற்று மாற்றம் ஏற்பட்டு, சூர்யாவை கதைக்குள் கொண்டு வந்தார் ஆர் ஜே பாலாஜி. படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டது. ட்ரீம்ஸ் வாரியர் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. திரிஷா சுவாசிகா உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆன்மீகம் கலந்த கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.
முதலில் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென, படத்திலிருந்து அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், படத்திற்குள் வந்தார். தொடர்ந்து கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தினார் ஆர் ஜே பாலாஜி.
தற்போது ஷூட்டிங் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு திரைப்படத்திலிருந்து டீசர் வெளியாகியிருக்கிறது. படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கும் சூர்யா, என் பேரு சரவணன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என டயலாக் கூறுகிறார். இதை வைத்து இந்த திரைப்படத்தில் அவர் கருப்பசாமி அவதாரத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. டீசர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





