தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக இசை சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. தனிப்பட்ட முறையில் அவர் மீதான விமர்சனங்கள், சர்ச்சைகள் என்னவாக இருந்தாலும், இசையை பொருத்த வரை அவருக்கான சிம்மாசனத்தில், அவர் கம்பீரமாக இன்று அமர்ந்து இருக்கிறார். அந்த சிம்மாசனம் அவருக்கானதாக மட்டுமே இருக்கிறது.
இளையராஜா இசையமைக்க துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை, ரஜினி கமல் துவங்கி, ராமராஜன் வரை மட்டுமின்றி, புதுமுக நடிகர்கள் என பலருக்கும் அவர் இசையமைத்து இருக்கிறார். அவரை பொருத்த வரை, இயக்குனர் மற்றும் படத்தின் கதை மட்டுமே பிரதானம் தவிர, நடிகர் நடிகைகள் குறித்து கண்டுகொண்டதில்லை.
அதே நேரத்தில் அவர் இசையமைத்த 1980-90 காலக்கட்டங்களில் ரஜினி, கமல் படங்கள் தவிர்த்து, பெரும்பாலான படங்கள், நடுத்தர மற்றும் லோ பட்ஜெட் படங்கள்தான். அதனால் அவர் படங்களை தரம் பிரித்து இசையமைக்காமல் எல்லா தரப்பு படங்களும் தன் இசையை தந்தார். இதில் பல நடிகர்களின் பெரிய வளர்ச்சிக்கு இளையராஜா இசை பக்கபலமாக இருந்தது.
அதற்கு முக்கிய உதாரணமாக நடிகர் ராமராஜனை குறிப்பிட்டுச் சொல்லலாம். இப்போதும் 80, 90ஸ் விரும்பும் பாடல்கள் என்றாலே, அதில் முக்கிய இடத்தில் இருப்பது ராமராஜன் படப் பாடல்களும்தான். நடிகரை தாண்டி அந்த பாடல்கள் இன்றும் ரசித்திருக்க முக்கிய காரணம், அவையனைத்தும் இளையராஜா இசைத்த பாடல்களாக இருக்கின்றன.
ஆனால் இன்றுள்ள இசையமைப்பாளர்கள் ஏஆர் ரகுமான், அனிருத், யுவன் சங்கர்ராஜா போன்ற பலரும், படங்களை தேர்வு செய்துதான் இசை அமைக்கிறார்கள். குறிப்பாக விஜய், அஜீத், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி என ஸ்டார் ஹீரோக்கள் நடித்த படங்களுக்கும், மணிரத்னம், வெற்றிமாறன், பாலா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே இசையமைக்க முன்வருகின்றனர்.
இப்படி பார்த்து பார்த்து பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே அவர்கள் தங்களது இசையை காட்டுகின்றனர். ஆனால் இளையராஜா படங்களை லோ பட்ஜெட், ஹை பட்ஜெட் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், தன் இசையால் அந்த படங்களை பெரிய படங்களாக்கி வெற்றி பெறச் செய்தார். ஆக, இந்த விஷயத்தில் எப்பவுமே ராஜா இசைஞானி இளையராஜாதான் என்ற பெருமையை அவர் பெற்றுவிட்டதாக, ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.





