தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தில் நேரடியாக இயக்குனராக களத்தில் இறங்கியவர். மாநகரம் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களை இயக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கைதி, கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்சன் செய்து இருக்கிறார். இதில் லியோ படம் மட்டுமே விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்த போதிலும் மற்ற படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றி படங்களாக லோகேஷ் கனகராஜூக்கு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கூலி படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் கூலி படம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ரிலீஸாகும் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் 1000 கோடி ரூபாய் என்ற மகத்தான வசூலை எட்டியது இல்லை. அதனால் இந்த படம் நிச்சயமாக 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைக்கும் என்ற ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவரிடம் கூலி படம் எல்சியு என்றும் விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சில காட்சிகளில் நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளதே என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, விக்ரம் படம் எப்படி கமலுக்காகவே உருவாக்கப்பட்டதோ அதேபோல் தான் இந்த கூலி படத்தின் கதையும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. அதனால் அந்த படத்தின் கேரக்டர் இந்த படத்திலோ அல்லது இந்த படத்தின் கேரக்டர் அந்த படத்திலோ இடம்பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.
கூலி படத்தில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக மறுத்து இருக்கிறார். அதே நேரத்தில் ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.





