தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான தீனா கஜினி ஏழாம் அறிவு ரமணா துப்பாக்கி சர்கார் கத்தி உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றவை, ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இதில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் மட்டும் ஏ ஆர் முருகதாஸூக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
அதேபோல் இந்தியில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படமும் இயக்குனர் ஏஆர் முருகதாஸூக்கு தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி என்ற படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
தர்பார் சிக்கந்தர் போன்ற தோல்வி படங்களை தந்த இயக்குனர் ஏஆர் முருகதாஸூக்கு இந்த படம் நிச்சயம் ஒரு சூப்பர் கம்பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மதராஸி படம் குறித்து பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, மதராஸி படம் கஜினி படத்தின் திரைக்கதையை போலவும் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் ஆக்சன் பாணியிலும் கலந்து இருக்கும்.
அந்த 2 படங்களும் கலந்த கலவையாக தான் இந்த படத்தை நான் டைரக்ட் செய்து உருவாக்கி இருக்கிறேன் மேலும் மதராஸி படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கக் கூடிய படமாகவும் இருக்கும். மதராஸி என்ற வார்த்தையை வட இந்தியர்கள் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தமிழர்களை அவர்கள் மதராஸி என்று தான் இப்போதும் சொல்கிறார்கள்.
அதனால் ஏற்படும் சில பிரச்னைகளை மையமாகக் கொண்டுதான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் தான் இந்த படத்துக்கு மதராஸி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கஜினி படத்தை போன்று இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் போன்ற சில சிக்கலான விஷயங்களும் இந்த கதையில் உள்ளது.
நான் இயக்கி வெற்றி பெற்ற தீனா ரமணா கஜினி துப்பாக்கி போன்ற படங்களின் வரிசையில் இந்த மதராஸி படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று ஏஆர் முருகதாஸ் அந்த நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார். மதராஸி படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இந்த படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





