தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இந்தி படங்களில் நடித்த அவர் தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தில் நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து வருஷம் 16 என்ற படத்தில் நடிகர் கார்த்திக் உடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இயக்குனர் பி வாசு இயக்கிய சின்னதம்பி படத்தில் நடித்த குஷ்புவுக்கு பட்டி தொட்டியெங்கும் ரசிகர் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் முரளி என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்பு மலையாளம் தெலுங்கு என பிறமொழிகளிலும் நடித்தார்.
ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை அவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். திரைப்பட நடிகையாக தயாரிப்பாளராக உள்ள நடிகை குஷ்பு, ஒரு கட்டத்தில் அரசியல் ஆர்வம் காரணமாக திமுகவில் இணைந்தார். பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். அதன்பிறகு பாஜக கட்சியில் சேர்ந்தார்.
பாஜகவில் அவருக்கு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக பொறுப்பு தரப்பட்டது. தொடர்ந்து பாஜக கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் திமுக குறித்தும் காங்கிரஸ் குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்தார். தொடர்ந்து ஒரு அரசியல்வாதியாக தமிழக அரசியலில் களத்தில் குஷ்பு இருந்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது நடிகை குஷ்புவுக்கு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் ஒப்புதலோடு குஷ்பு மாநில துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் பாஜக கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, இப்போது மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் இன்னும் 13 கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு மாநில துணைத்தலைவர் பதவிகளை பாஜக தலைமை வழங்கியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களத்தில் தீவிர பணியாற்றவும் வாய்ப்பிருந்தால் குஷ்பு போன்ற பிரபலங்களை பாஜக வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





