சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வருபவர்களில் சிலருக்கு எப்படியாவது சில படங்களில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு காட்சியில் அவர்களது நடிப்பு ரசிகர்களை கவர்ந்து விட்டால் தொடர்ந்து அவரை அடுத்தடுத்த படங்களில் புக் செய்து விடுகின்றனர். நேரமும் நல்ல கேரக்டர்களும் கூடி வந்தால் அப்புறம் அவரும் தமிழ் சினிமாவில் பிரபலமாகி விடுகிறார்.
அப்படிதான் எத்தனையே நடிகர்கள் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களாக மாறி இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகர் யோகிபாபு. ஆரம்பத்தில் சில காட்சிகளில் முகம் காட்டிய நடிகர் யோகிபாபு, இன்று பிஸியான ஒரு நடிகராக பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
நடிகர் யோகிபாபுவை விட்டால் காமெடி செய்ய ஆளில்லை என்கிற அளவில் தமிழ் சினிமா காமெடி நடிகர்கள் தட்டுப்பாட்டில் தவித்து வருகிறது. சூரி சந்தானம் சதீஷ் போன்றவர்கள் ஹீரோக்களாக மாறிவிட்டனர். இந்த காலகட்டத்தில் வடிவேலு காமெடி ரசிப்பதற்கானதாக இல்லை. கவுண்டமணி செந்தில் முதுமையால் நடிக்க முடிவதில்லை. விவேக் மறைந்து விட்டார்.
அதனால் யோகிபாபு ரெடின் கிங்ஸ்லி மொட்டை ராஜேந்திரன் என தமிழ் சினிமாவில் இந்த காமெடி செய்யாத நடிகர்களாக நடிக்க வைத்து, காமெடி செய்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், காமெடியை ரசிக்கும் ரசிகர்கள்தான் நொந்து போயுள்ளனர். அதனால் தமிழ் படங்களில் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. டிவியில் செல்லில் பழைய காமெடி காட்சிகளை பார்த்து பலரும் மனதை ஆறுதலாக்கி கொள்கின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் அவர்களுக்காக வாடகை கேரவன் தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்யப்படும். அதற்கான டீசல் செலவு, டிரைவர் பேட்டா மற்றும் கேரவன் வாடகை கட்டணம் தயாரிப்பாளர் செலுத்தி விடுவது வழக்கம். இதில் யோகிபாபு சொந்தமாக கேரவன் வைத்திருக்கிறார்.
அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் அவரது கேரவனை தான் பயன்படுத்துகிறார். ஆனால் படத்தில் நடிக்க அவர் வாங்கிய சம்பளம் போக, அவர் பயன்படுத்தும் கேரவனுக்கு தினசரி வாடகையாக ரூ. 40 ஆயிரம் வாங்குகிறார். அந்த தொகையை தினமும் அவரது மனைவியின் வங்கி கணக்கில் தயாரிப்பாளர் செலுத்திய பிறகே படப்பிடிப்பு தளத்துக்கு அவர் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





