தமிழ் சினிமாவில் இன்றைய இளம் இயக்குனர்களில் ரசிகர்கள் மத்தியில் மிக அதிக கவனம் பெற்ற முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய மாநகரம் கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் இயக்கிய கூலி படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் உடன் கூலி படத்தில் கைகோர்த்து இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்து உள்ள நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் கூலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில், கடந்த 2ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர்கள் சத்யராஜ் அமீர்கான் உபேந்திரா நாகார்ஜூனா சௌபின் சாகிர் நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக பங்கேற்று பேசி வருகிறார். கூலி படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். ரசிகர்கள் டிக்கெட் காசு கொடுத்து தியேட்டருக்குள் வருகின்றனர். அவர்களுக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு கொடுத்த டிக்கெட் காசுக்கு அவர்களை திருப்திப்படுத்தி அனுப்புவேன். இதுக்கு நான் கேரண்டி என்றும் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே கூறியிருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது, கூலி படத்தின் இடைவேளை காட்சியை திரையரங்கில் பார்க்க நான் ரொம்பவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். கமல்ஹாசனின் ரசிகனான எனக்கு எப்போதுமே கமல் சார் ஸ்பெஷல்தான். ஆனால் முதல் முறையாக ரஜினி சாருக்கு படம் பண்ணும் போது, ரஜினி சார் படத்தோட இடைவேளைக் காட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று 2 வருடங்களாக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன்.
அதை திரையரங்கில் அவரது ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கமெண்ட் செய்த சில ரசிகர்கள், விக்ரம் படத்தில் கமலஹாசன் இடைவேளை நேரத்தில்தான் படத்திலேயே தோன்றுவார். அதுபோல இந்த கூலி படத்திலும் ஒருவேளை ரஜினிகாந்த் இடைவேளை நேரத்தில்தான் வருவாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.





