விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேபிஒய் பாலா. குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார். நடிகராக சமூக சேவகராக கேபிஒய் பாலா தன்னால் இயன்ற உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.சத்தியமங்கலம் மலைவாழ் கிராம மக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி கொடுத்து உதவினார்.
ஆட்டோக்கள் தையல் மிஷின்கள் மற்றும் உணவு உடை மருத்துவ செலவுகள் கல்வி உதவிகள் என்று கேபிஒய் பாலா தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மேலும் ஏழை மாணவர்களையும் கேபிஒய் பாலா தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறார். பல்வேறு விதங்களில் மக்களுக்கு உதவி வரும் நடன இயக்குனர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் என்ற சேவை அமைப்புடன் கேபிஒய் பாலாவும் இணைந்து பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.
சமீபத்தில் மரபணு குறைபாடு உள்ள குழந்தையின் மருத்துவச் செலவுக்காக 8 கோடி ரூபாய் நிதி வேண்டும் என்று பாலா வீடியோ ஒன்றில் கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த குழந்தையின் மருத்துவ செலவுக்கான 8 கோடி ரூபாய் நிதியும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேபிஒய் பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் கேபிஒய் பாலா கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையில் சந்தோசமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. மக்களாகிய நீங்கள்தான் இதற்கு காரணம். சாஸ்திகா என்ற குழந்தை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மருத்துவச் செலவுக்கு 8 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறி நான் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தேன்.
அந்த வீடியோவுக்கு கிடைத்த பலனாக இப்போது நீங்கள் அனைவரும் செய்த உதவி மூலமாக 8 கோடி ரூபாய் கிடைத்துவிட்டது. மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரும் நலமாக இருக்கிறார். எனது வீடியோ மூலமாக இத்தனை கோடி பணம் அனுப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என்று அந்த வீடியோவில் கேபிஒய் பாலா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பாலாவுடன் குழந்தையின் தந்தையும் அந்த வீடியோவில் பேசி நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் இறுதியில் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள் என்று கேபிஒய் பாலா குறிப்பிட்டு கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற கேபிஒய் பாலா வெளியிட்ட வீடியோவை பார்த்து பொதுமக்களே ரூ. 8 கோடி வரை நிதியுதவி செய்து அந்த குழந்தையை காப்பாற்றியிருப்பது மனிதநேயத்தில் உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மக்கள் மனங்களில் கேபிஒய் பாலாவுக்கு கிடைத்துள்ள வரவேற்பும் ஆதரவும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்பதும் மறுக்க முடியாதது.





