நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர். நடிகர் விஜய் நடிகர் அஜீத் தான் இன்றைக்கு போட்டி நடிகர்களாக இருதரப்பு ரசிகர்களாலும் கருதப்படுகின்றனர். அஜீத் படங்களை இயக்க, இயக்குநர்களிடையே கடும்போட்டி நிலவுகிறது. அவர் விரும்பிய இயக்குநர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது.
தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முந்தைய வலிமை, துணிவு ஆகிய இரண்டு படங்களுமே, நடிகர் அஜீத்குமாருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. சந்தர்ப்ப சூழலால், கடந்தாண்டு துவங்கப்பட வேண்டிய விடாமுயற்சி, நீண்ட தாமதத்துக்கு பின், இப்போது இயக்கப்பட்டு வருகிறது.
நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்தாலும் சினிமா நடிகருக்கான எவ்வித அடையாளங்களும் இல்லாத சாதாரண மனிதராக நடந்துக்கொள்பவர். பந்தா காட்டாத பண்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை இரண்டு பஸ்களில் பயணித்த லேட்டாக வந்த மேக்கப் அசிஸ்டெண்டுக்கு, உடனடியாக புதிய பைக் வாங்கி கொடுக்கும் அளவுக்கு, பெருந்தன்மையாளர் அஜீத்.
கோவில்கள், விமான நிலையம், படப்பிடிப்பு தளங்கள் என எந்த இடத்திலும், நடிகர் அஜீத்குமாராக இல்லாமல், சாதாரண மனிதர் அஜீத்குமாராக அவர் நடந்துக்கொள்வதை ரசிகர்கள் மட்டுமின்றி, அவருடன் நடிக்கும் சக நடிகர்களே பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நீண்ட நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை, நடிகை அம்பிகா நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
அமர்க்களம் என்ற படத்தில், அஜீத்குமார் உடன் நடித்திருந்தேன்.அந்த படத்தில் ஷாலினி, நாசர், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில், நடந்த சம்பவம்தான் இது, அஜீத்குமார் செய்தித்தாள் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அதில், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு விளம்பரம் வந்திருந்தது. அதை பார்த்த அஜீத்குமார், உடனடியாக அதுகுறித்து விசாரித்தார். அடுத்து, தனது அலுவலகத்துக்கு போன் செய்து, குறிப்பிட்ட ஒரு தொகையை அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனைக்கு சென்று கொடுக்கமாறு கூறினார்.
இன்றைய நிலையில், நேரில் வந்து உதவி கேட்டாலே உதவுவதற்கு பலரும் யோசிக்கிற நிலையில், செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து, மனம் வருந்தி உடனடியாக தானாகவே உதவ முன்வந்த அஜீத்குமாரின் நல்ல குணத்தை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று கூறி இருக்கிறார் மாஜி கதாநாயகி அம்பிகா. அமர்க்களம் படத்தில், ஹீரோயின் ஷாலினியின் அம்மா கேரக்டரில் அம்பிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





