தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படம் மூலம் கடந்த 2007ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி. சீனியர் நடிகர் சிவகுமாரின் இளைய மகன். இயக்குனர் அமீர் பருத்திவீரன் படம் மூலம் கார்த்திக்கு ஒரு மிகச்சிறந்த துவக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தித் தந்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படமாக இன்றும் இருக்கிறது.
பருத்திவீரன் படத்துக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்த நடிகர் கார்த்தி இப்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். நடிகர் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான். இந்த படத்தை ராஜூ முருகன் இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.
அதன் பிறகு நடிகர் கார்த்தி, நடிகர் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்த படம் மெய்யழகன். இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான வா வாத்தியார் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நலன் குமாரசாமி டைரக்ட் செய்து இருக்கிறார்.
அதேபோல் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் 2 படமும் உருவாகி ரிலீஸாக காத்திருக்கிறது. இந்த படமும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படத்துக்கு டிஜிட்டல் வியாபாரத்தில் நல்ல விலை கிடைக்கவில்லை. ரூ. 60 கோடி கேட்ட நிலையில், ரூ. 26 கோடி மட்டுமே விலை தருவதாக ஓடிடி நிறுவனங்கள் கூறியதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் குழப்பத்தில் உள்ளது.
இதற்கிடையே நடிகர் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ், நடிகர் கார்த்தி நடிக்கும் 29வது படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்காக ராமேஸ்வரத்தில் ஒரு கிராமம் போன்ற பெரிய செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு மார்ஷல் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க இருந்தார். ஆனால் கால்சீட் பிரச்னை காரணமாக நடிகர் நிவின்பாலி நடிக்காமல் விலகிவிட்டார்.
இதையடுத்து இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர் ஜீவா பல படங்களில் ஜாலியான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அவரது ஜாலியான நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. சிவா மனசுல சக்தி போன்ற படங்களில் ஜீவா நடிப்பு இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதனால் நடிகர் ஜீவா மார்ஷல் படத்தில் வில்லனாக நடித்தால் ரசிகர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.





