எப்போதுமே பெரிய வெற்றிப் படங்களை கொடுக்கும் ஹீரோக்களின் அடுத்த படம் எப்போது வரும் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஆனால் கடந்தாண்டில் லப்பர் பந்து என்ற மாஸ் ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த இளம் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த அடுத்த படம் இதுவரை திரைக்கு வரவில்லை.
அவர் சில படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல் வந்தாலும் படம் குறித்த அப்டேட் எதுவும் வராத நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து, அடுத்து தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் நடித்த சுவாசிகாவும் மாமன் கருப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் லப்பர் பந்து படத்தில் நடித்த அட்டக்கத்தி தினேஷூம் வேட்டுவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் எந்த படத்தில் நடிக்கிறார், அவரது நடிப்பில் அடுத்து என்ன படம் வரப்போகிறது என்ற குழப்பத்தில் தொடர்ந்து ரசிகர்கள் இருந்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே அவர் டீசல் என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருப்பதாக தகவல் மட்டுமே உள்ளது.
நடிகர் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்த டீசல் என்ற படத்தை எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ளது. டைரக்டர் சண்முகம் முத்துசாமி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் வினய் கருணாஸ் மற்றும் அனன்யா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
டீசல் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இது பான்இந்தியா படமாக உருவாகியுள்ளது. நடிகர் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்த பார்க்கிங் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் ஐந்து மொழிகளில் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. பார்க்கிங் படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டீசல் படத்தின் டீசர் நாளை மாலை 4.02 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதை நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் உடன் பதிவு செய்து அறிவித்திருக்கிறார். பார்க்கிங் லப்பர் பந்து படங்களின் வரிசையில் டீசல் படமும் ஒரு மாஸ் ஹிட் படமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் நடிகர் ஹரீஷ் கல்யாண் ரசிகர்களை இந்த அறிவிப்பு உற்சாகப்படுத்தியுள்ளது.





