சில தினங்களுக்கு முன்பு கோவையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பாஜகவை சேர்ந்த நடிகர் ரஞ்சித்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது நடிகர் ரஞ்சித் பேசுகையில், ஒரு வாக்காளனாக ஒரு குடிமகனாக நான் இருக்கிறேன். எனக்கு அப்பா யார் என்றால் அது மோடி தான். அவர்தான் என்னை காப்பாற்றுகிறார்.
அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. உலக நாடுகள் கொண்டாடும் ஒரு தலைவராக மோடி இருக்கிறார். மதுரையில் நடந்த தவெக கட்சி மாநாட்டில் அவரை மிஸ்டர் மோடி என்று கைநீட்டி சொடக்கு போட்டு நடிகர் விஜய் பேசி இருக்கிறார். மிஸ்டர் மோடி என்று அவர் அழைத்து பேசியிருக்கிறார்.
அப்படி பேச நடிகர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது? இதை பார்க்கும் போது எனக்கு கோபமாகவும் ஆத்திரமாகவும் வருகிறது. முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக முதல்வரை அங்கிள் என்றும் பிரதமரை மிஸ்டர் மோடி என்றும் நடிகர் விஜய் பேசுகிறார். இதுதான் அரசியல் நாகரிகமா? அறிவில்லையா?
ஒரு கட்சியின் தலைவர் விஜயே இப்படி பேசினால் அவரை நம்பி வரும் இளைஞர்கள் என்ன ஆவார்கள்? எனக்கு வருகிற கோபத்திற்கும் ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதை நாம் ஓட்டாக ஓங்கி குத்த வேண்டும் என்று நடிகர் ரஞ்சித் அந்த கூட்டத்தில் கோபமாக பேசியிருந்தார்.
இதுகுறித்து நடிகர் ரஞ்சித் மீது கோவையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக ஆதரவாளர் ஆர்கே ஜலீல் என்பவர் காவல்துறையில் புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





