அஜித் குமார் தற்போது கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு பந்தயங்களில் பங்கேற்று இருக்கிறார் அஜித். இதனை முடித்துக் கொண்டு, அக்டோபர் மாதம் தனது படத்திற்கான பணிகளில் அவர் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதம் அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார் அஜித் குமார். இப்படியான நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்த தகவல் கசிந்து இருக்கிறது.
அதாவது அவரது முந்தைய திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே, இந்தப் படத்தையும் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரும் பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறதாம். இதில் கதாநாயகியாக கேஜிஎப் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படம் குறித்த கதையை இசையமைப்பாளர் அனிருத்திடம் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாகவும், அவர் இசையமைக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் பேசப்படுகிறது. ஏ கே 64வது திரைப்படம் குறித்த அறிவிப்பு, மிக விரைவில் வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்தரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இப்படியான சூழலில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கான டிஜிட்டல் உரிமம் இப்போதுதான் விலை போய் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கமர்சியல் ரீதியாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கவலைப்படவே இல்லை.
படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை மசாலா காட்சிகள் மட்டுமே இடம் பெற்று இருந்தன. இருப்பினும் இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது. முதலில் இந்த திரைப்படத்தை சன் டிவி தான் வாங்கி இருப்பதாக கூறினார்கள். ஆனால் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்நிறுவனம் விலகியதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் விஜய் டிவி இந்த திரைப்படத்தை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே முதல்முறையாக விஜய் டிவி குட் பேட் அக்லியை வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.





