இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து தொழில் கற்றவர்தான் கே பாக்யராஜ். இயக்குனராக நடிகராக கே பாக்யராஜ் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். இன்றும் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றால் அது இயக்குனர் கே பாக்யராஜ் தான். இவரது சிஷ்யர்கள்தான் ஆர் பாண்டியராஜன் மற்றும் ஆர் பார்த்திபன் போன்றவர்கள்.
இயக்குனர் ஆர் பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசி ஆண்பாவம் மனைவி ரெடி டபுள்ஸ் நெத்தியடி கோபாலா கோபாலா கபடி கபடி சுப்ரமணிய சாமி என பல படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை. பாட்டி சொல்லை தட்டாதே கதாநாயகன் என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இப்போது குணச்சித்திர வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பூக்கி. அவரது சகோதரி மகன் அஜய் நடித்த பூக்கி படத்தின் விழா சமீபத்தில் நடந்தது. இந்த பூக்கி படத்தில் நடிகர் பாண்டியராஜன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதாவும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.
பூக்கி படவிழாவில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் பேசியதாவது, பூக்கி படத்தில் நடித்தபோது முழு சம்பளமும் டக்கென வந்தது. இளைஞர்களுடன் பணியாற்றுவது நல்ல அனுபவம். நான் படம் இயக்கப் போகிறேன் என்று என் குருநாதர் கே பாக்யராஜிடம் சொன்னது இப்போது என் நினைவுக்கு வந்தது.
ஒரு நள்ளிரவில் இதை அவரிடம் சொல்லி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். அப்போது அவர், படம் டைரக்சன் செய். ஆனால் டைரக்ட் பண்ணுவதாக நடிக்காதே என்று எனக்கு அட்வைஸ் செய்தார். சில இயக்குனர்கள் நாம் இயக்குனர் என்று செட்டில் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக சவுண்ட் விடுவார்கள்.
படப்பிடிப்பு தளத்தில் கடுமையாக வேலை செய்வது போல காட்டுவார்கள். அதெல்லாம் தேவையில்லை. காட்சியில் என்ன வருகிறது என்பதற்காக உழைக்க வேண்டியதுதான் டைரக்டர் பொறுப்பு. வெளியில் டைரக்டராக நடிக்க தேவையில்லை. இப்போதும் இயக்குனர்கள் சிலர் சிறப்பாக திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள் என்று இயக்குனர் மற்றும் நடிகர் ஆர் பாண்டியராஜன் அந்த விழாவில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





