பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக வந்தவர் வெற்றிமாறன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக இருந்தது. தொடர்ந்து ஆடுகளம் விசாரணை அசுரன் வடசென்னை விடுதலை விடுதலை 2 ஆகிய படங்களை இயக்கினார். இதில் விடுதலை 2 படம் தவிர மற்ற எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
இதுவரை 7 படங்களை வெற்றிமாறன் இயக்கிய நிலையில் இதில் 4 படங்களில் நடிகர் தனுஷ்தான் நாயகனாக நடித்திருக்கிறார். இப்போது சிம்பு நடிக்கும் ஒரு படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் நீடிக்கிறது.
இதற்கிடையே இயக்குனர் வெற்றிமாறன் ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் மூலம் சொந்தமாக பல படங்களை தயாரித்திருக்கிறார். அந்த வகையில் பேட் கேர்ள் என்ற படத்தையும் மனுஷி என்ற படத்தையும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் அவர் தயாரித்திருக்கிறார்.
ஆனால் இந்த 2 படங்களிலும் தேவையற்ற அரசியல் விமர்சன காட்சிகளும் பாலியல் சார்ந்த காட்சிகளும் இருப்பதால் சென்சார் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த படங்கள் ரிலீஸ் ஆவதே பெரிய போராட்டமாக உள்ளது. கோர்ட் வரை சென்றும் பிரச்னைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த இயக்குனர் வெற்றிமாறன், இந்த 2 படங்களுடன் நான் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறேன். இனி சொந்த படங்கள் தயாரிக்க மாட்டேன் என்றும் அறிவித்து விட்டார்.
ஒரு இயக்குனராக ஜெயித்த என்னால், தயாரிப்பாளராக ஜெயிக்க முடியவில்லை. நிறைய துன்பங்களை நஷ்டங்களை சந்தித்து விட்டேன் என்றும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். வெற்றிமாறன் போன்ற ஒரு பிரபலமான இயக்குனரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடும் சூழலில், நடிகர் ரவி மோகன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை சில தினங்களுக்கு முன்புதான் ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் 2 பெரிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரவிமோகன், அதற்காக சிலரிடம் பெரிய கடன் தொகைகளை அதிக வட்டிக்கு கேட்டிருப்பதாக தெரிகிறது. வெற்றிமாறன் போன்றவர்களே தயாரிப்பு நிறுவனம் வேண்டாம் என்கிற முடிவுக்கு வருகிற போது, நீங்கள் எப்படி தாக்கு பிடிப்பீர்கள் என பைனான்ஸ் செய்ய வருபவர்கள், கேள்வி எழுப்புகிறார்கள். இதனால் வெற்றிமாறனின் நடவடிக்கையால் ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் நடிகர் ரவி மோகன் கடும் அப்செட்டில் இருக்கிறார்.





