தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன். கடந்த 1980 – 90களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த அவரை மைக் மோகன் என்று சொன்னால்தான் தமிழ் ரசிகர்களுக்கு தெரியும். காரணம், அவரது படங்களில் மோகன் கையில் மைக் பிடித்து பாடினாலே அந்த படம் பெரிய ஹிட் ஆகி விடும் என்பது நம்பிக்கை.
கடந்த 1977ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான கோகிலா என்ற படம்தான் மோகன் அறிமுகமான முதல் படம். இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய இந்த படத்தில் கமல்ஹாசன் ஷோபா ரோஜா ரமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் மைக் மோகன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனாலும் அடுத்து 3 ஆண்டுகள் கழித்துதான் மோகனுக்கு பட வாய்ப்பு கிடைத்தது.
1980-ம் ஆண்டில் பாலு மகேந்திரா இயக்கத்தில் தமிழில் வெளியான மூடுபனி என்ற படத்தில் பாஸ்கர் என்ற முக்கிய கேரக்டரில் மோகன் நடித்திருந்தார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை மோகன் கொடுத்தார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மைக் மோகன் கூறியதாவது, கோகிலா படத்தின் முதல் ஷெட்யூலில் 3 நாட்கள் நடித்தேன்.
அதன்பிறகு, நான் இருந்த ட்ராமா குருப் நண்பர்கள் ஒரு படம் எடுத்தார்கள். என்னையும் அழைத்தார்கள். நானும் அவர்களுடன் போய்விட்டேன். மைசூரில் இருந்து உள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது கோகிலா படத்தின் 2வது ஷெட்யூல் எடுக்க பாலுமகேந்திரா, கமல்ஹாசன் ஆகியோர் பெங்களூருக்கு வந்துள்ளனர். என் வீட்டுக்கு போன் செய்துள்ளனர். அப்போது என் அப்பா, அவன் இல்லையே ஷூட்டிங் போய்விட்டான் என்று கூறியுள்ளார்.
அதனால் பாலுமகேந்திரா டென்ஷன் ஆகியிருக்கிறார். அப்போது கமல் சார் ரொம்பவும் பிஸியான நடிகர். அவரது தேதி கிடைப்பதே பெரிய விஷயம். நான் காராக்பூர் காட்டுக்குள் படப்பிடிப்பில் இருக்கிறேன். அப்போ டெலிகிராம் கொடுத்து என்னை வரவழைத்தார்கள். நான் வர 3 நாட்கள் ஆகிவிட்டது. நான் வந்தபோது உதவி இயக்குனர், என்ன? இப்படி பண்ணிட்டீங்க என்று கேட்க, எனக்கு தெரியாதே என்று சொன்னேன்.
அப்போது கமல் சார் வந்து என்னிடம், நீ நல்லா நடிக்கிறே, அதெல்லாம் சரிதான், ஆனா ஷூட்டிங் இருக்கா இல்லையானு நீதான் கேட்கணும். அவர் எப்படி சொல்வார்? இப்போ இருந்து டைரி வச்சிக்கோ, எப்பப்போ யார் யார் கூப்பிடுவாங்க? எத்தனை நாள் தேவைப்படும் என்பதை குறித்து வைத்துக்கொள் என்று சொன்னார். அதன்பிறகு இதுவரை நான் ஷூட்டிங்கிற்கு தாமதமாக போனதே இல்லை என்று மைக் மோகன் கூறியிருக்கிறார்.





