தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவே வியந்து பார்க்கும் கலைஞர் தான் கமல்ஹாசன். தனது சிறுவயதில் களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது பயணம், தற்போது வரை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. ஒரு திரைப்படத்தின் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அதை அச்சு பிசுறாமல் செய்து காட்டும் கலைஞர் தான் கமல்ஹாசன்.
படங்களில் கமல்ஹாசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று உறுதியாக கூறலாம். மாநில அரசு சார்பிலும் மத்திய அரசு சார்பிலும் விருதுகளை வாங்கி குவித்திருக்கும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவுக்கு புகழை சேர்த்துக் கொண்டே வருகிறார். தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக்லைப் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை தொடங்கிய அவர், கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் திமுக கூட்டணியில், நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பது போன்றவற்றில் மட்டுமே கமல் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இப்படியான சூழலில், இனி தன்னை உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அறிக்கையை விடுத்திருக்கும் அவர், சினிமாக்கலை என்பது எந்த ஒரு தனி மனிதனைவிடவும் பெரியது.
அந்தக் கலையை மேலும் மேலும் கற்றுக்கொண்டு அதில் பரிணாமம் அடைய விரும்பும் மாணவன் தான் நான். கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்து கொண்டு உழைப்பதே எனக்கு உவப்பானது. அதேபோல் ஒரு கலையை விட கலைஞன் உயர்ந்தவன் இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை. இதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். எனது பட்டத்தை துறப்பது என முடிவு செய்திருக்கிறேன்.
என் மீது பிரியம் கொண்டவர்கள், இனி என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ அல்லது KH என்றோ அழைக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இத்தனை காலமாக என் மீது அன்பு கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் குமாரும், தல என்கிற பட்டம் வேண்டாம் அதற்கு பதில் ஏகே என்று அழைக்கலாம் என கூறி இருந்தார். தற்போது அவர் பாணியை கமலஹாசன் தொடர்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.





