தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் முரளி. அவரது மகன்கள் அதர்வா ஆகாஷ் ஆகியோரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டனர். அதர்வா, நடிகர் முரளி மறைவுக்கு முன்பே பாணா காத்தாடி என்ற படத்தில் நாயகனாக நடித்து அறிமுகமாகி விட்டார். அவரது தம்பி ஆகாஷ், கடந்தாண்டில் நேசிப்பாயா என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.
நடிகர் அதர்வா பாணா காத்தாடி படத்தை தொடர்ந்து சண்டி வீரன் 100 கணிதன் பரதேசி ஈட்டி என பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதர்வா நடித்த சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையிலும் அதர்வா முன்னணி நடிகராக பெரிய இடத்துக்கு வரவில்லை. இதற்கிடையே சில ஆண்டுகளாக அவர் நடிக்காமலும் இருந்து வந்தார்.
இந்நிலையில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், தயாரிப்பில் இதயம் முரளி என்ற படத்தில் நடிகர் அதர்வா நடித்து வருகிறார். இது ஏற்கனவே நடிகர் முரளி இதயம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் ஹீராவை காதலிக்கும் அவர் கடைசி வரை தன் காதலை சொல்லாமல் போராடிக்கொண்டே இருப்பார். அது மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
இப்போது இதயம் படத்தின் தொடர்ச்சியாக இதயம் முரளி என்ற டைட்டிலில் அவரது மகன் அதர்வா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் அமலாக்கத்துறை சோதனையால் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்து இந்த படத்தை தயாரிக்கவும் இயக்கவும் முடியவில்லை. அதனால் படப்பிடிப்பு தடைபட்டது.
அதன்பிறகு இப்போது காதல் முரளி படப்பிடிப்பை டான் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் துவங்கியுள்ளது. சென்னையில் உள்ள தீவுத்திடலில் நடிகர் அதர்வா பங்கேற்ற அதிரடி சண்டை காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. தனுஷ் நடித்த இட்லி கடை படத்தையும் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளதால் அந்த படத்தின் ரிலீஸ் பணிகளிலும் அவர் இப்போது ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் இதயம் முரளி படக்குழுவினர் படத்தின் நாயகன் அதர்வா இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு 15 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நாயகி அமெரிக்கா செல்வதால் அங்கும் விடாமல் துரத்திச் செல்லும் படத்தின் நாயகன் அதர்வா, அமெரிக்காவில் தன் காதலை கதாநாயகியிடம் சொல்வது போல் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.





